Thursday, April 16, 2015

இலக்கியாவின் முதல் நாள் பறப்பு

Edit Posted by with No comments

"பிள்ளையை அங்கை விட்டுட்டு பிரிஞ்சிருக்கிறது கவலை வராதா?" இலக்கியாவின் அம்மாவிடம் கேட்டேன்.

"அவவும் பழகத் தானே வேணும்" என்று இலக்கியாவின் அம்மா சொன்னாலும் எனக்கு அந்தப் பதிலில் அப்போது சமாதானமில்லை.

கடந்த திங்களன்று இலக்கியாவுக்கு இடம் கிடைத்த மகப்பேற்று நிலையத்தைப் பார்வையிட்டு விட்டுத் திரும்பும் போது தான் மேற்கண்ட சம்பாஷணை நம் இருவருக்கும்.

இலக்கியா பிறந்த நாளில் இருந்து அடுத்த நான்கு வாரங்கள் அவரிடமிருந்து பிரிந்த போது இருந்த நிலைக்கு ஒப்பானது இன்று கடந்த நான்கு மணி நேரங்களாக அவரை பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் வைத்திருந்தது.

ஒரு பல்கலைக்கழகத்தில் கூட இடம் வாங்கிவிடலாம் ஒரு நல்ல பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இடம் எடுக்க அதிக பட்சம் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை தான் இங்கு.
அதுவும் ஒரு காரணம் இலக்கியா
தன் ஏழு மாதங்களில் பராமரிப்பு நிலையம் செல்வது.

அதை விட முக்கிய காரணம் இந்த நாட்டு வாழ்க்கைச் சூழலில் பராமரிப்பு நிலையம் என்ற எல்லையைக் கடந்து குழந்தைகளுக்கான செயல் திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளுக்காகவே இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. 
எனது சகவேலையாளினியின் பிள்ளைக்கு இவ்வாறானதொரு நிலை வந்து பின்னர் பள்ளிக்கூடத்தைத் தவிர்த்த மேலதிக பயிற்சிக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தது.

"உங்கள் பிள்ளையை முதல் நாள் விட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்" என்று என் மேலதிகாரி (பெண்) ஐ நான் கேட்ட போது "பக்கத்திலுள்ள பூங்காவுக்குப் போய் அழுது தீர்த்துவிட்டு காபிக்கடையில் ஒரு காபி குடித்து கவலையை ஆற்றிக் கொண்டேன்" என்றார். :-) 
24/7 பிள்ளையைப் பார்த்துக் கொள்ளும் தாய்க்கும் ஓய்வு தேவை தானே என்று நியாயப்படுத்திக் கொண்டார் அவர்.

தகுந்த பராமரிப்பு நிலையத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக ஏழெட்டு பிள்ளைப் பராமரிப்பு நிலையம் ஏறி இறங்கியிருப்பேன். "இது அசுத்தம்", "இதுல இருக்கிறவர் சிடு மூஞ்சி" என்று ஒதுக்கியதன் உளவியல் அது மட்டுமல்ல பிள்ளை தன் தாயுடன் இருக்கட்டுமே என்பது தான். 

கடந்த திங்கட்கிழமை இலக்கியாவுக்கு இடம் கிடைத்த பிள்ளைப் பராமரிப்பு நிலையத்துக்கு முதன்முதலில் போனோம். உள்ளே அழைத்துச் சென்றார்கள். விசாலமான அந்த உள்ளறைகளில் வயதுப் பிரிவுக்கேற்ப பிரித்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். ஓடியாடுது ஒன்று, அழுதுவிட்டுச் சிரிக்குது ஒன்று, மண் விளையாடிக் கொண்டே விநோதமாக வெறித்துப் பார்க்குது ஒன்று, இருந்த இடத்திலேயே தூங்கி வழியுது ஒன்று.
அந்த எல்லாக் குழந்தைகளையும் ஒரே சமயத்தில் கட்டியணைக்க வேண்டும் போலத் தோன்றியது. இவர்கள் எல்லோரையும் நிமிடம் தப்பாமல் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும் பெண்கள் தான் எவ்வளவு மேன்மையானவர்கள்.

இலக்கியாவை குழந்தைகளுக்கான இருக்கையில் அமர்த்தி விட்டுத் தூர நின்று பார்த்தோம்.  என்ன நடக்குது என்று தெரியாத பருவம், அப்பா, அம்மா இருக்கிறார்களே அது போதும் என்ற நினைப்பிலோ என்னமோ எங்களைப் பார்த்துத் தூர இருந்து சிரிக்குது குழந்தை.
அப்போது எனக்கு கிட்டத்தட்ட அழுகையே வந்துவிட்டது. 

இன்று நான்கு மணி நேரம் இலக்கியாவை விட்டுப் பார்ப்போம் முழு நாள் தேவை இல்லை என்று முடிவெடுத்து விடிகாலையிலேயே வெளிநாட்டுப் பயணம் போல குழந்தைக்கு உணவு, உடை முதற்கொண்டு எல்லாம் திணித்த மூட்டையோடு கிளம்பினோம். "நான் கொஞ்ச நேரம் இருக்கிறேன்" என்றார் இலக்கியாவின் அம்மா.
தாயையும், மகளையும் விட்டுட்டு வேலைக்குக் கிளம்பி வந்தாச்சு.

இரண்டு மணி நேரம் கழித்து தொலைபேசுகிறேன்.
"பிள்ளையை அங்க விட்டுட்டு வெளியில வந்து நிக்கிறன், சரியான கவலையா இருக்கு" நான் முன்னர் என்ன நினைத்தேனோ அதை நியாயப்படுத்தினார் இலக்கியாவின் அம்மா.

ஊரெல்லாம் உலாத்திவிட்டு இருளடர்ந்த நேரம் சைக்கிளை வலித்து சந்து பொந்தெல்லாம் தாண்டி வீடு வந்து சேர்ந்தால் அம்மா வீட்டு முற்றத்தில் காவல் நிற்பார்.
"ஏனம்மா நித்திரை கொள்ளாமல் வெளியில காவல் காக்கிறீங்கள்"
"பெத்த மனம் பித்து ஐயா" என்பார் அம்மா அப்போது. இப்போது அது விளங்குது. இன்னும் கடக்க வேண்டும் நிறைய.

0 comments:

Post a Comment