Tuesday, November 21, 2017

இலக்கியா எங்கே

Edit Posted by with No comments
இலக்கியா தன் தாயின் பணப்பையை (wallet) நோண்டிக் கொண்டிருந்தார் நேற்று.
அதற்குள் இலக்கியாவின் அம்மாவும், நானும் கல்யாணத்துக்கு முந்திய காலத்தில் சேர்ந்து எடுத்த படம் இருந்தது. அதைக் கண்டு புளுகத்தில் “என் அப்பா” “என் அம்மா” என்று எங்களைத் தொட்டுத் தொட்டுக் காட்டிச் செல்லம் கொண்டாடியவர் ஒரு கட்டத்தில் திடீரென்று பொறி தட்டி “இதில் என்னைக் காணவில்லையே” என்று தன்னைத் தேடி அழத் தொடங்கி விட்டார். 🙄
“புதுப் படத்தில் இருக்கு அதை இங்கே வைப்போம்” என்று இலக்கியாவை ஒருவாறு சமாதானப்படுத்தி விட்டேன்.

இலக்கியா கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர் இப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசை ;

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ப லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

இலக்கியாவின் வீட்டுப் பெயர் “லயா” 😀😍

#மூன்றுவயது_இலக்கியா_அட்டகாசங்கள்

Tuesday, May 2, 2017

இலக்கியாவுக்கு வளர்க்க ஒரு மாடு வேணுமாம் 🐄

Edit Posted by with No comments


சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப் பயணத்தில் நகரத்தின் சுவடுபடாத ஒரு பண்ணை சார்ந்த கிராமியச் சூழல் இருக்கிறது. அங்கே Malgoa எனும் இடத்தில் மாதா கோயிலைத் தரிசிக்க நாம் ஒவ்வொரு வார இறுதியிலும் பயணப்படுவது வழக்கம்.

எங்கள் பயண வழித்தடத்தின் இரு மருங்கும் புல் மேடுகள் இருபக்கமும் நிறைந்த இடம் வரும் போது குதிரை, மாடு பார்க்கத் தயாராகி விடுவார் இலக்கியா. ஒவ்வொரு குடியிருப்பிலும் கட்டியிருக்கும் குதிரைகளையும், மேயும் மாடுகளையும் கண்டு புழுகத்தில் விழுந்து விழுந்து சிரிப்பார் காருக்குள் இருந்து. இன்றைய பயணமும் அப்படித்தான். ஆனால் எங்களின் போதாத காலம் மேய்ச்சல் மாடுகள் கண்ணில் அகப்படவில்லை. குதிரைகள் தான் கருப்பும், மண்ணிறமும் அல்லது மண்ணிறமும் வெள்ளையுமாகக் கலந்து திரிந்து கொண்டிருந்தன. முதலில் ஆர்வமாகப் பார்த்தவர் பிறகு எனக்கு மாடு பார்க்க வேண்டும் என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்து விட்டார் இலக்கியா.
எங்கட வாழ்நாளிலை ஒரு குதிரை கண்டிருப்பமோ? பத்தொன்பது வயது வரேக்க தான் தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் குதிரை கண்டதாக ஞாபகம் அது வரைக்கும் நாம்பன் மாடுகளோட தானே எங்கட சீவியம் இவ என்னடா எண்டால் குதிரை வேண்டாம் மாடு வேணும்
எண்டு இலக்கியா அப்பா மனசுக்குள் புழுங்கினர்.

ஒருவாறு இலக்கியாவைச் சமாதானப்படுத்தி கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது
வழியின் மறுபக்கம் மாடுகளும், கன்றுக் குட்டிகளும் தென்பட்டன. காரை வளைச்சுப் புல் தரைப் பக்கம் இறக்கி விட்டு இலக்கியாவுக்கு மாடுகளைக் காட்டினால் அவரின் புளுகத்துக்கு அளவேயில்லை. தன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்துச் சிரித்துக் கொண்டாடினார் ம்மோ என்று கத்திப் பார்த்தார். கொஞ்ச நேரம் அங்கே இருந்து விட்டுக் கிளம்பும் போது தான் பிரச்ச்னை ஆரம்பம். அந்த மாடுகளை வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும் என்று இலக்கியா தன் மொழியில் பேசி போதாக்குறைக்கு எங்களுக்கு விளங்கட்டும் என்று கைப்பாசையிலும் காட்டினார்.
இதென்னடா பிரச்சனையாப் போச்சு என்று ஒருவாறு அவரைப் பிராக்குக் காட்டி மாடுகளுக்கு Bye சொல்ல வைத்துக் கிளம்பியாச்சு.
இலக்கியா தன் தாயின் வயிற்றில் இருக்கும் போது கொஞ்சம் அதிகப்படியாகவே ராமராஜன் பாட்டைக் கேட்டுத் தொலைத்து விட்டோமோ என்று இலக்கியா அப்பா யோசித்துக் கொண்டே காரை ஓட்டினார்.

Tuesday, April 25, 2017

இலக்கியாவின் பகல் நேரக் குடிலில் ANZAC தினம்

Edit Posted by with No comments
இலக்கியாவின் பகல் நேரக் குடிலில் ANZAC தினம்
நினைவு கூரப்பட்ட போது முதல் ஆளாகப் போய் நிகழ்வுக்கு வந்த படை வீரரைக் கட்டியணைத்து வரவேற்றாராம் 😀

"They shall grow not old, as we that are left grow old;
Age shall not weary them, nor the years condemn.
At the going down of the sun and in the morning
We will remember them."

Lest we forget.
ANZAC DAY 25, 2017

Friday, December 23, 2016

இலக்கியாவின் தம்பி

Edit Posted by with No comments
இலக்கியாவுக்கு உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன்.
அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று திரும்பச் சொல்லிக் காட்டியவர், 
தம்பி என்றதும் tummy என்று நினைத்துத் தன் வயிற்றைக் காட்டுகிறார் அவ்வ்வ் 🙄

Saturday, December 3, 2016

இலக்கியா டயறிக் குறிப்பு - 27 மாதங்கள்

Edit Posted by with No comments

இலக்கியாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை. 
ஆனால் பாட்டுக் கேட்பதென்றால் ஏக குஷி. அன்றொரு நாள் ரம் பம் பம் ஆரம்பம் பாட்டு காரில் ஒலித்த போது பின்னிருக்கையில் இருந்து பாட்டின் ரிதத்துக்கேற்ப அபிநயம் பிடித்துக் காட்டினார் இருந்த இருப்பிலேயே. அத்தோடு தர்மதுரை படத்தில் வரும் மக்கா கலங்குதப்பா பாட்டைக் கேட்டால் மெதுவாக ஆரம்பித்துத் துள்ளலோடு ஆட்டம் நிறையும் 😀
இலக்கியா இதுநாள் வரைக்கும் விரும்பித் திரும்பத் திரும்பப் பார்க்கும் ஒரே பாட்டு என்றால் அவர் முதலாவது பிறந்த நாள் வீடியோவில் கொடுத்த அஞ்சலி அஞ்சலி அஞ்சலி பாட்டு, அத்தோடு இப்போது இலக்கியா அம்மா அடிக்கடி பார்க்கும் இந்தச் சிறுமி பாடும் https://www.youtube.com/shared?ci=R1O2fCIYmks பாட்டும் சேர்ந்து விட்டது. தாளம் போட்டுக் கொண்டே பார்ப்பார்.

குழந்தையின் விரல்களைப் பிரித்து விட்டு உள்ளங்கையில் முழங்கையால் கீரை கடைஞ்சு சோறு ஊட்டும் விளையாட்டுக் காட்டும் போது ஒவ்வொரு கவளத்தையும் இது இலக்கியாக்கு, இது அப்பாக்கு இது அம்மாக்கு என்று பாவனை பிடித்து விளையாடுவேன். அப்போது நண்டூருது நரியூருது செய்ய ஆரம்பித்தால் முழங்கைக்குப் போக முன்பே கூச்சத்தோடு க்ளுக் என்று சிரிக்க ஆரம்பித்து விடுவார்.ஆனால் மீண்டும் செஞ்சு காட்டச் சொல்லுவார்.
அதே போல் என் கையை நீட்டித் தன் கூட்டாளிமார் அபிர், நோவா என்று பெயர்களைச் சொல்லிச் சோறு ஊட்டுவது போலப் பாவனை காட்டிவிட்டு நண்டூருது நரியூருது செய்வாராம்.

படம் போட்ட குழந்தைப் பாடல்கள் புத்தகத்தின் ஒவ்வொரு அட்டையிலும் இருக்கும் படத்தை வைத்தே இது இன்ன பாட்டு என்று அந்தப் பாட்டைத் தன் மொழியில் பாடுவார். சிங்கம், புலி, பூனை, நாய் ஐக் கண்டால் அதே மாதிரிச் சத்தம் வேறு போட்டுக் காட்டுவார். 

தன்னுடைய விளையாட்டுப் பொருட்களில் இருந்து எதுவும் விளையாடி முடிந்ததும் அதே இடத்தில் இருக்க வேண்டும் என்று பொறுப்பாக எடுத்துப் போய் வைப்பார். பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் மற்றைய பிள்ளைகளின் சூப்பி (dummy) ஐக் கூட இனம் கண்டு இது இன்னாருடையது என்று தேடிப் போய்க் கொடுப்பாராம்.
விளையாட்டுப் பொம்மையை விட வீட்டுப் பொருட்கள், பால் போத்தல் போன்ற விளையாட்டுப் பொருட்கள் தான் இலக்கியாவுக்குப் பெரு விருப்பானவை.

ஒரு காலத்தில் அப்பா என்ற வார்த்தையைக் கேட்க எவ்வளவு தூரம் தவம் கிடந்தேன் இப்போதெல்லாம் இலக்கியா அந்த வரத்தைத் தாராளமாகவே கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஏதாவது தேவை என்றால் "அப்பா" என்று விளித்து அதற்கு மேல் தன்னுடைய சங்கேதச் சொற்களைப் பொருத்திக் கேட்பார். அதை நான் புரிந்து கொண்டு செய்வேனாம் 😀
என்னைக் காணாத நேரத்திலும் அப்பா அப்பா என்று தேடுவதால் இப்போதெல்லாம் இயன்றவரை சமூக உலாத்தல்களை ஒதுக்கி விட்டு இலக்கியாவே கதி என்று இருந்து விடுவேன்.

இலக்கியாவை நித்திரைக்கு அழைத்துச் செல்வது என் நாளாந்தத் திருப்பணி. நான் வரும் வரை நித்திரை கொள்ளாமல் தன் தாயுடன் விளையாடிக் கொண்டிருப்பார். இலக்கியாவுக்கு அவரின் தாய் தன் நண்பி போல அடிக்கடி தன் தாயைச் சீண்டி வேடிக்கை காட்டுவார். நான் வந்து விட்டால் தன் தாயைப் போகச் சொல்லிச் சைகை காட்டி விட்டு என்னைக் கூப்பிடுவார் 😀

Tuesday, November 29, 2016

இலக்கியாவின் தீபாவளி

Edit Posted by with No comments
சிட்னி முருகன் ஆலயத்தில் தீபாவளிச் சிறப்புத் தரிசனம் இனிதே நிறைந்தது பூசை முடிந்ததும் இலக்கியா ய்யேஏஏஏஎ என்று சொல்லிக் கை தட்டினார் 😀

Tuesday, October 11, 2016

இலக்கியாவுக்கு ஏடு தொடக்கல் 📚

Edit Posted by with No comments


இந்த ஆண்டு விஜயதசமி நாளில் இலக்கியாவுக்கு ஏடு தொடக்கச் சொல்லி ஊரில் இருந்து இலக்கியாவின் அப்பம்மாவின் வேண்டுகோள் வந்தது.
சிட்னியை ஆட்டிப் படைக்கும் வைரஸ் காய்ச்சலால் எங்கள் வீட்டில் மூவருமே மாறி மாறிப் பாதிக்கப்பட்டதால் எதையும் தீர்மானமாக முடிவெடுக்காத நிலையில் நேற்று முன் தினம் தான் சரி இலக்கியாவுக்கும் வயது இரண்டாகி விட்டது ஏடு தொடக்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

நாங்கள் ஊரில் இருந்த காலத்தில் தம்பி வாத்தியார் தான் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலின் மூலஸ்தானத்தை நோக்கிய வழிபாட்டிடத்தில் இருந்து ஏடு தொடக்குவார். மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலையின் அதிபர் கனகராசா அவர்கள் பனையோலையில் அச்சிட்ட ஆனா ஆவன்னா எழுத்துகளோடு கூடிய அந்த ஏடுதான் ஏடு தொடக்கலின் மூல ஆவணம்.

இன்று காலை மூவருமாகச் சிட்னி முருகன் கோயிலுக்குப் போனோம். காலை ஏழு மணிப் பூசை கணக்காக ஆரம்பித்தது. பூசை முடிந்து மணி ஏழு முப்பது காட்டவும், கோவிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பிள்ளையார் சந்நிதியில் ஐயர் வந்து ஏடு தொடக்கலுக்கு ஆயத்தப்படுத்தினார். இலக்கியா பிறந்த முப்பத்தோராம் நாள் நான் கோயிலுக்குப் போன சமயம் கையில் இருந்த கற்பூரச் சரையை எதிர்ப்பட்ட ஐயரிடம் கொடுக்கவும், "கடவுள் மாதிரித் தந்தீர்கள் இப்ப தான் கற்பூரம் தீர்ந்தது" என்று சொல்லி வாங்கிப் போன அதே ஐயர் தான் என்பதால் உள்ளூரச் சந்தோஷம்.

ஐயருக்கு முன்னால் சப்பாணி கட்டி இலக்கியாவோடு அமர்ந்தேன். இலக்கியாவுக்கு ஒரே புதினமாக இருந்தது. ஐயரைப் பார்த்துச் சிரித்தார்.
"ஆனா ஆவன்னா சொல்லுவாவோ" என்று ஐயர் கேட்டார்.
"இல்லை ஐயா"
(இதுக்கெல்லாம் பயற்சி எடுத்துக் கொண்டு வருவார்கள் என்று பின்னர் கண்டு கொண்டேன் :-)

ஐயர் தன்னிடமிருந்த எழுத்துச் சுவடியில் இருக்கும் உயிரெழுத்துகளில் இருந்து ஆரம்பித்தார்.

ஐயர் : ஆனா

இலக்கியா : ஆஆஆன்ன்ன்னா என்று ஒரு இழுவை இழுத்து விட்டு அம்ம்மா என்று ஐயருக்குச் சொல்லிக் காட்டினார். "அ" என்றால் அம்மா தானே என்பது இலக்கியாவின் வியாக்கியானம்

ஐயர் : ஆவன்னா

இலக்கியா : ஆஆஆஆஆன்ன்னன்னா
(ஆவன்னா எனக்கு வராது அதனால் தன்னன்னா போட்டு முடிச்சிடுவம் என்று நினைத்தாரோ :-)
அதோடு விட்டாரோ தன் அம்மாவைச் செல்லப் பாஷையில் கூப்பிடும் "மம்மம்மா" என்று ஐயருக்குச் சொல்லிக் காட்டினார்.

ஐயர் : ஈனா

இலக்கியா : ஈனா என்று படாரென்று சொல்லி விட்டு ஐயருக்குத் தன் அம்மாவைக் காட்டி அம்மா என்று அறிமுகப்படுத்தினார் (ரெம்ப முக்கியம் :-) )

சூழ இருந்த கூட்டத்துக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.

பிறகு தட்டத்தில் நிரம்பியிருந்த வெள்ளை அரிசியை ஐயர் பரப்பி வைக்கத் தானும் அது போலச் செய்து பார்த்து விட்டு அடுத்தது என்ன என்று ஐயரை ஏறிட்டுப் பார்த்தார்.
இம்முறை இலக்கியாவின் அப்பாவே ஆனா ஆவன்னா சொல்லி, ஏபிசிடி சொல்லி, இலக்கங்களையும் சொல்லிக் கொண்டே இலக்கியாவின் விரலைப் பிடித்து ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தார்.

ஐயர் தட்டத்துடன் எல்லாவற்றையும் கையளித்தார்.

எல்லாம் இனிதாக நடத்தி முடிச்சாச்சு என்ற வெற்றிக் களிப்பில் ஐயரைப் பார்த்து
"Byeeeeeeee" என்று சொல்லி டாட்டா காட்டி விட்டு அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டார் இலக்கியா

Saturday, September 10, 2016

இலக்கியாவின் முடியாட்சி 💇🏻

Edit Posted by with No comments
இருபத்து நான்கு மாதங்களுக்குப் பொதுவில் இன்று மூன்றாவது முறையாகத் தன் முடி துறந்தார் இலக்கியா. முடி துறத்தல் என்றால் மொட்டை ராஜேந்திரன் அளவுக்கெல்லாம் இல்லை. 
இலக்கியா பிறந்த நாள் தொட்டு எல்லா இந்து மதச் சடங்குக்கும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு ஆனால் "மொட்டை அடிக்காமல்" காது குத்துதல் என்ற நிபந்தனை மட்டும் விதிவிலக்காக :-)

"பொம்பிளைப் பிள்ளை எண்டால் மொட்டை அடிக்கக் கூடாது பிள்ளை பாவம்" என்ற இலக்கியா அம்மாவின் கொள்கைக்கு நான் முரணாக இருந்தால் என்னுடைய நிலை அல்லது தலை சூரியன் சரத்குமார் அல்லது அறச்சீற்றம் கூடினால் ஜென்டில் மேன் சரண்ராஜ் அளவுக்கு மோசமாகி விடும் என்பதால் அடக்கி வாசித்தேன்.

நான் சின்னப் பிள்ளையாக இருந்த காலம் தொட்டு எங்களூரில் சபா சகோதரர்கள் தான் சிகை அலங்கார நிபுணர்கள். ஜானி பட ரஜினியின் ஓவியம் தீட்டப்பட்டு "நியூ வேவ் சலூன்" என்று புதுக்கடையைக் குளக்கரை முகப்பில் திறக்கும் வரை எங்களூர் மக்கள் கை கொடுத்தார்கள். விடிகாலையிலேயே கூட்டி மெழுகியிருக்கும். காத்திருப்பவர்கள் படிக்க ஈழநாடு, உதயன் ஈறாக இருக்கும். வானொலிப் பெட்டி பாடிக் கொண்டிருக்கும். ஒருமுறை வானொலியில் 
"தலையைக் குனியும் தாமரையே" பாட்டு ஓடிக் கொண்டிருக்க பொன்னுத்துரைக் கிழவர் தாளம் போட்டுக் கொண்டே தூங்கி வழிந்ததும் நினைப்புக்கு வருகுது. பெடியளுக்கு "மங்கி க்றொஸ்", பொம்பிளைப் பிள்ளையள் எண்டால் "டயானா கட்" இது தான் அவர் வழமை.
அண்மையில் மிஷ்கினின் சவரக்கத்தி பாடல் https://www.youtube.com/shared?ci=JgjhJdM1q3A என்னை உடனே ஆட்கொண்டதற்கு அதுவொரு உப காரணம்.
பணப் பசை கொண்டவர்கள் வீடு தேடிப் போய் முடி வெட்டும் வழக்கமும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் சமூகச் சட்டத்தின் விளைவாக சிகையலங்கார நிபுணர்கள் யாரும் வாடிக்கையாளத் வீடு தேடிப் போய் முடி வெட்டவோ, தாடி மழிக்கவோ கூடாது, நியாயமான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு  வந்தது. அதுவரை கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டியது தான். தலை முடி வெட்டும் போதே எனக்கு கண்கள் செருக ஆரம்பிக்கும். தலை கவிழும் போதெல்லாம் சூரனின் தலையை மாத்தி நிமித்துமாற் போல சபா அண்ணர் நெட்டி நிமிர்த்துவார். சவரக்கத்தி கன்னவோரங்களில் "கிர்க்கு கிர்க்கு" என்று வெட்டும் போது கிட்டும் சுகமிருக்கிறதே ஆகா என்று பழைய நினைப்பில் சிறிது நேரம் மூழ்கிப் போனேன்.

எட்டு மாதங்கள் கழித்து நான் கடவுள் ஆர்யா மாதிரியான தோற்றத்தில் இலக்கியாவைக் கூட்டிக் கொண்டு போகிறோமே அந்நியப்பட்டு விட்ட சிகையலங்கார நிபுணரைக் கண்டு பயப்புடுமோ குழந்தை என உள்ளூர ஒரு பயம் இருக்கத் தான் செய்தது. ஜொனி என் ஆஸ்தான சிகையலங்கார நிபுணர். மத்திய கிழக்கு நாட்டவர், சிரித்த முகம்.
இலக்கியாவுக்குப் பொன்னாடை போர்த்திய அவரைப் பார்த்து விநோதமாக ஒரு பார்வை.
பிள்ளைக்கு எது தோதாக இருக்கிறதோ அதன்படி வெட்டுங்கள் என்றோம். அவரோ இலக்கியா அம்மாவை விடக் கவனமாக, நோகாது முடியின் நுனியை மட்டும் கொறித்துக் கொண்டிருந்தார். இலக்கியா ஏவிஎம் பூமி உருண்டை போல உருண்டு உருண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் தன் மேல் விழும் தலை முடி எச்சங்களைத் தன் தாயிடம் கொடுத்தார். தலை முடி வெட்டி முடியும் தருணமது, தாயைப் போல பிள்ளை என்று நினைத்த என் நினைப்பில் திடீரென்று எதிர்பாராத மாற்றம்.
சிகையலங்கார நிபுணர் ஜொனியை நோக்கித் தன்னைத் தூக்கச் சொல்லி என்னிடமிருந்து பாய்ந்தார். அவரைக் கட்டிக் கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடித்து அழுகை வரை போயாச்சு. இலக்கியா அம்மாவுக்குத் தெரியாமல் க்ளுக்கென்று சிரித்துக் கொண்டேன் அங்க்
ஒரு வழியாக இலக்கியாவைக் கவர்ந்து வீட்டுக்குப் போகும் வழி நெடுக ஜொனியைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்துக் கொண்டே வந்தார் இலக்கியா.

Saturday, September 3, 2016

வன்னியில் கொண்டாடிய இலக்கியாவின் பிறந்த நாள்

Edit Posted by with No comments



இந்த முறையும் இலக்கியாவின் பிறந்த நாளை வன்னியில் இருக்கும் தன்னுடைய அண்ணன், அக்காமார்களுடன் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். கடந்த முதலாவது பிறந்த தினத்தை செஞ்சோலையில் இருக்கும் உறவுகளோடு மட்டுமே கொண்டாட முடிந்தது. இம்முறை குறைந்த பட்சம் இரண்டு இல்லங்களிலாவது கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் தாயகம் செல்ல முடியாத சூழல் நேர்ந்த போது வழக்கம் போலக் கை கொடுத்தார் என் நண்பர்.

வன்னியில் ஏராளமான சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்தால் ஆயிரக்கணக்கில் தேறும் அந்தப் பச்சிளங்குழந்தைகள் யாவருமே தம் தாய், தந்தையைப் போரின் பசிக்குத் தீனியாகக் கொடுத்தவர்கள். அதிலும் 90 வீதமானோர் 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் போரில் ஒரு சில நாள் இடவெளியிலேயே தன் தாய், தன் தந்தை என்று ஒன்றன் பின் ஒன்றாக இழந்தவர்கள். ஒரே நாளில் பிறந்த பச்சிளங்குழந்தையில் இருந்து ஒரு வயதே நிரம்பாத பால் மணம் மாறாப் பிஞ்சு அவை.
என் நண்பர் தனது வட்டத்தில் இருக்கும் நட்பு, சொந்தக்காரரை அரவணைத்து இந்த இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்குச் சிறப்பு உணவில் இருந்து, சுற்றுலா வரை ஒருங்கிணைத்துச் செய்பவர். நிதமும் இதே சிந்தனையில் இவர்களைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருப்பார். நாமும் திருமண நாளில் இருந்து பிறந்த நாள் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அவர் வழியாக ஏற்பாடு செய்வோம். செஞ்சோலை, பாரதி இல்லம், அன்பு இல்லம் என்று அவரின்  பணி நீளும்.

இலக்கியாவின் பிறந்த நாளுக்கு இரண்டு இல்லங்கள், அதிலும் குறிப்பாகச் செஞ்சோலை இருக்க வேண்டும். என்ற அன்பு வேண்டு கோளை ஏற்றுத் தாயகத்துக்குப் பயணமான அவர் தலை மேற்கொண்டார். இலக்கியாவின் பிறந்த நாள் நேற்று விடிகாலை அவரிடம் தொலைபேசினேன்.

"சாவக்காட்டில நல்ல உடன் இறால் வாங்க வந்தனான், அன்பு இல்லத்தில இருக்கிற பிள்ளையளுக்கு இறால் குழம்பும், மரக்கறியும் சேர்த்து மத்தியானச் சாப்பாடு குடுப்பம்" என்றார்.

"ஓம் தாராளமாகச் செய்யும், அப்பிடியே செஞ்சோலைப் பிள்ளையளுக்கு என்ன விருப்பமாம்" என்று கேட்டேன்.

"இரவுச் சாப்பாடு தானே கொத்து றொட்டி எண்டால் அவைக்கு நல்லாப் பிடிக்குமாம்" இது நண்பர்.

"அந்தப் பிள்ளையளுக்கு ஐஸ்கிறீமும் வாங்கிக்
குடுமப்பா, ஆசைப்படுவினம்" என்றேன்.

"என்ன விசர்க்கதை கதைக்கிறீர் 200 பிள்ளையள் எல்லோ" என்றார் அவர்.

"பிரச்சனையில்லை வாங்கிக் குடும்" என்று விட்டு அவரை இடைஞ்சல் படுத்தாமல் விட்டேன்.

அன்பு இல்லத்தில் நடக்கும் மதிய உணவுப் படங்களை வாட்சாப்பில் அனுப்பி விட்டுப் பின்னேரம் அளவில் செஞ்சோலையில் இருக்கும் அந்தப் பிள்ளைகள் ஐஸ்கிறீம் சாப்பிடும் வீடியோவையும் அனுப்பி விட்டார். அழுகை வரும் போல
உணர்ச்சி வசம் கடந்த நிலையில் இருந்தேன்.
சிட்னி நேரம் விடிகாலை இரண்டு மணிக்கு இன்னொரு வீடியோ வருகுது அவரிடமிருந்து.
செஞ்சோலையில் இருக்கும் குழந்தைகள் இலக்கியாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடி இரவுணவை அருந்தும் காட்சி அது.

எங்கள் தாயக விடுதலையில் வன்னிச் சனம் இழந்ததுக்கு நிகரில்லை அதுவும் அந்த 2009 போரின் அறுவடையை இலக்கியாவின் சந்ததியே கடன் தீர்த்து முடிக்காது. இப்படியான சின்னச் சின்னச் சந்தோஷங்களையாவது அந்தப் பிஞ்சுகளுக்குக் காட்டிப் பாவ மோட்சம் பெறுவோம் என்று தொடர்வோம். இது வெறும் ஆத்ம திருப்தியின் சிறு துளியே. 
யாழ்ப்பாணத்தில் இருந்து இலக்கியாவின் பிறந்த நாளுக்கு முதல் நாளில் இருந்து நேற்றிரவு வரை இந்த ஏற்பாடுகளைச் செய்த என் நண்பரின் பணிக்கு என் பணம் வெறும் தூசு. இதையெல்லாம் அவரிடம் சொன்னால் "சும்மா இருமய்யா" என்று சொல்லி ஒதுக்கிவிட்டுத் தன் காரியத்தைப் பார்க்கப் போய்விடுவார்.
"உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு அனாதை இல்லையம்மா" பாடலை அனிச்சையாக முணுமுணுத்தது மனம்.

இலக்கியாவின் இரண்டாவது பிறந்த நாளில்

Edit Posted by with 6 comments

இன்று இலக்கியா எங்களைப் புதிதாய்ப் பிறக்க வைத்து இரண்டு ஆண்டுகளைத் தொடுகிறது.
எங்களுக்கெல்லாம் பத்து மாசம் அல்ல பல வருஷத் தவமாகக் கிடைத்தவள் எங்கள் அன்புச் செல்வம்.
விடிகாலையில் எழுந்து காலை சிட்னி முருகனிடமும், மல்கோவா மாதாவிடவும் போய்க் கும்பிட்டு விட்டு வந்திருக்கிறோம்.

இலக்கியா பிறந்த நாளில் இருந்து முப்பது தினங்கள் தாதியர் பராமரிப்பில் இருக்க வேண்டிய சூழல். பத்து நாளில் இலக்கியா அம்மாவை வீடு போக அனுப்பி விட்டார்கள். மீதி நாட்கள் ஒவ்வொன்றும் இலக்கியாவைத் தேடிப் போகும் அவதியும், பார்வை நேரம் முடிந்து  பிள்ளையை அங்கு விட்டு விட்டு  அழுது கொண்டே வீடு தேடி வரும் பயணமாக அமைந்தது எங்கள் இருவருக்கும்.
இப்போதும் உணர்வோடு நினைவிருக்கிறது, அல்லிப் பூ போன்ற மெத்தென்று கிடக்கும் அந்தக் குழந்தையை நோகாமல் ஏந்தப் பயிற்சி எடுத்துத் தூக்கிப் பார்த்த அந்த நாளும், இறுக மூடிய அந்தக் கண்கள் ஒரு நாள் மெல்ல விரிந்து சிரித்த போது கையில் ஏந்திக் கொண்டிருந்த என் கண்களுக்குள் எரிகல் விழுந்தது போலப் பனித்துச் சிவந்து அழுததும்.
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த முருகன் போலத் தான் எங்கள் இலக்கியாவும். தன் குழந்தை மேல் கரிசனை கொண்டு ஆதங்கப்படும் இலக்கியாவின் அம்மாவிடம் அந்த நாட்களில் இலக்கியாவுக்காக விட்டுக் கொடுக்காமல் உரிமையோடு பேசித் தம் கண்ணுக்குள் வைத்துப் பத்திரமாக வளர்த்தனர். இந்த முப்பது தினங்கள் நாம் பெற்ற இன்னொரு புதிய அனுபவத்தை எழுத ஆரம்பித்தால் தொடர்கதையாக நீளும்.

இன்றிலிருந்து சரியாக இரண்டு வருடங்கள் முந்திய  செப்டெம்பர் 3 ஆம் திகதி 2014 ஆம் காலை ஆண்டு காலை நேரம் அது. அந்த நாளை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

எனது வழமையான நாளாக அமையாது அதீத போராட்டத்தின் பின்னர் ஒரு உன்னதத்தைக் கொடுத்த நாளாக அமைந்திருந்தது என்று தெரிந்திராது வேலைக்குக் கிளம்புகிறேன்.

நிறை மாதக் கர்ப்பிணியான என் மனைவிக்கு செப்டெம்பர் 3 க்கு முந்திய நாட்களில் இலேசாக வலி எடுத்திருந்தது. பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே மகப்பேற்றுக்காகப் பதிவு செய்து வைத்திருந்ததால் எமது மகப்பேற்று வைத்தியரின் ஆலோசனைப்படி மனைவியை அங்கே அழைத்துச் சென்றேன். மனைவியைப் பரிசோதித்து விட்டு இது வெறும் பிரவசகால வலி என்றும் நிறைய ஓய்வெடுக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஆனால் என் மனைவிக்கோ உள்ளூரப் பயம் கவ்வியிருந்ததை என்னால் உணர முடிந்தது.  எனக்கும் அதே நிலைதான் ஆனால் நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரைச் சமாதானப்படுத்தியும், தொலைக்காட்சியில் குழந்தைகள் பாடுவதையும் போட்டுப் பராக்குக் காட்டினேன். எங்கள் பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. 2012 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த அந்த மோசமான ஆகஸ்ட் 14 ஆம் நாள் அடிக்கடி வந்து நினைப்பூட்டியது. அந்த நாளை நினைக்கும் போதெல்லாம் தற்கொலைப் பாறையின் விளிம்பில் நிற்குமாற் போல இருக்கும். அந்த நாளுக்குப் பின்னர் ஒரு வைத்தியர் எங்கள் முகத்தில் அடித்தால் இனிமேல் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று சொல்லிவிட்டார்.

அதன் பின்னர் ஒரு திடீரென்று முடிவெடுத்து நவம்பர் 2012 இந்தியாவுக்குச் சென்று குருவாயூரப்பனையும், கதிர்க்காமக் கந்தனையும் வேண்டி முறையிட்டேன். அந்த விஜயத்தின் போது எழுத்தாளர் பாரா சார் ஐ அப்போது சந்தித்தபோது, "கானா எதுக்கும் கவலைப்படாதே உனக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், எங்களுக்கு அருள் கொடுத்த திருக்கருக்காவூர் அம்மன் கோயில் இருக்கு நான் உனக்காக வேண்டுதல் வைக்கிறேன் நீ அப்புறமா வந்து வேண்டுதலை நிறைவேற்று" என்றார்.
சந்தோஷமான இந்த நாளில் பழைய நினைவுகளை மீண்டும் நினைப்பூட்டாமல் கடக்கிறேன்.

இம்முறை என் மனைவி கருவுற்ற நாள் முதல் ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு நெருப்பாற்றைக் கடப்பது போல இருக்கும்.இந்த ஆண்டு தை பிறந்ததும் சிட்னி முருகனிடமும், மல்கோவா மரியன்னையுடமும் என் வேண்டுதலை முறையிட்டேன்.

செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை, வேலைக்குக் கிளம்ப என்னைத் தயார்படுத்தும் போது, கடுமையான இடுப்பு வலி ஏற்படுகின்றது என் மனைவிக்கு. பிரசவ காலத்தில் இடுப்பு வலி என்பது மோசமான பின் விளைவுக்கு அறிகுறி என்ற மருத்துவரின் எச்சரிக்கை நினைவுக்கு வந்து, உடனேயே மருத்துவமனைக்குப் பயணிக்கிறோம். மனைவியை அங்கிருக்கும் மகப்பேற்றுப் பகுதியில் கையளித்துவிட்டுக் காத்திருப்போம் என்று நினைத்த போது " நீங்கள் வேலைக்குச் செல்லுங்கள் அவசரம் என்றால் செல்போனில் அழைக்கிறேன்" என்றார் மனைவி. மருத்துவமனை நிர்வாகம் மிகவும் பொறுப்போடு கண்காணிக்கும் என்ற நிம்மதியில் நானும் வேலைக்குக் கிளம்பினேன். அன்று முக்கியமான ஒரு அலுவலகச் சந்திப்பு இருந்ததும் ஒரு காரணம். வேலைக்குச் செல்லும் போதே மனைவியின் ஊரைச் சேர்ந்த அக்கா ஒருவரின் அழைப்பு எனக்கு வருகிறது.
"நான் போய்ப் பார்க்கிறேன் அவரை" என்று அந்த அக்கா சொன்னது எனக்கு சிட்னி முருகனே ஆள் அனுப்பி உதவியது போலிருந்தது.

வேலைக்குப் போய் அரை மணி நேரத்தில் மனைவியின் உறவுக்கார அக்காவிடமிருந்து அழைப்பு, "உடனேயே அவருக்கு ஒப்பிரேஷன் செய்யவேணுமாம்" என்று அவர் சொன்னபோது என் தலையில் ஒரு இடி இறங்கியது. அலுவலகத்தில் இருந்து ரயிலில் பயணித்துப் போனால் ஒரு மணி நேரமெடுக்கும். டாக்ஸி பிடித்தால் குறைந்தது 40 நிமிடம் எடுக்கும் தொலைவில் மருத்துவமனை. எனக்கு அந்த நேரம் எதுவும் ஓடாமல் ரயில் நிலையத்தை நோக்கி ஓடுகிறேன். எதையும் தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடத் திராணியற்ற நிலை அது. பிறகு அந்தத் திசையில் இருந்து டாக்ஸி நிறுத்துமிடத்துக்கு ஓடுகிறேன். எதிர்ப்பட்ட டாக்ஸிக்காரரிடம் மருத்துவமனை பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்கிறேன். ஆனால் அவருக்கு என் அவசரத்தைக் காண்பிக்கவில்லை, இவர் வேகமாக ஓடி வழியில் ஏதும் அசம்பாவிதம் வந்துவிடும் என்ற பயமே காரணம்.
ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு இருப்புக் கொள்ளாது கால்கள் உதைத்துத் தள்ளுகின்றன. எப்படியாவது மனைவிக்கு நடக்க இருக்கும் சத்திர சிகிச்சைக்குக் குறித்த நேரத்துக்குப் போய்விட வேண்டுமே ஆண்டவா.
அந்த டாக்ஸிக்காரர் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் தன் டாக்ஸியை விட்டு 20 நிமிடத்துக்குள் மருத்துவமனை வளாகத்தில் என்னை இறக்குகிறார்.

அங்கிருந்து மேல் மாடி காண ஓடி மகப்பேற்றுப் பிரிவுக்குள் நுழைந்தேன். எதிர்ப்பட்ட சீன இனத்துத் தாதிக்கு என்னை நன்றாகத் தெரியும். முந்திய அனர்த்தத்தின் போதும் அவர்தான் என் மனைவியைப் பராமரித்தார். இன்னும் இரு நிமிடம் தான் இருக்கு சத்திர சிகிச்சை நடக்கப்போகிறது உடனேயே மருத்துவமனை உடையை மாற்றச் சொல்லி அனுப்புகிறார். கால் ஒரு பக்கம் கை ஒரு பக்கம் என்று இழுபட்டு அவசரத்தில் குழம்பி ஒருவாறாக என் உடையை அவசரமாக மாற்றினேன். மூச்சிரைத்து நெஞ்சில் இலேசாக முட்டியது. சத்திர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே வந்த இன்னொரு ஆண் தாதி என் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்தச் சொல்கிறார். சத்திர சிகிச்சைப் பிரிவுக்குள் போகிறேன். என் மனைவிக்கு நோவு ஏற்படாத ஊசி போட்டு அரை மயக்கத்தில் இருக்கிறார்.

என் மனைவியின் இடுப்பு வரை திரை மறைத்து மறு கரையில் இருந்த வைத்தியர் குழாமும் தாதிமாரும் வேகவேகமாக இயங்கியவாறு தம் பணியில் முனைப்பாக இருக்கிறார்கள். ஏதோ எனக்காகக் காத்திருந்தது போல, நான் அங்கு நுழைந்திருந்த சில நொடிக்கெல்லாம் அறுவை சிகிச்சை நடந்து தூக்கிப் பிடிக்கிறார்கள் அசைந்தாடும் உயிருள்ள ஒரு தங்கப் பேழையை. வெளியே வந்த வாக்கிலேயே வீறிட்டு அழுகிறது அது.

எங்களூர் கந்தசுவாமியார் தீர்த்தத் திருவிழாவில் தாமரைக் குளத்தில் இருந்து முக்கி எழும் போது வெண்பூச்சும் சிவப்புப் பூக்களும் ஒட்டிய உடலோடு இருக்குமாற் போல அந்தக் காட்சி.

அந்தக் குழந்தையை அப்படியே தூக்கி ஒரு மேசையில் கிடத்தினார்கள்.
எனக்கு அந்த நேரம் எதுவுமே பேசமுடியாதவாறு வாய் இறுக்கியது.  கைகளைக் கூப்பி அந்த ஆண் தாதியைப் பார்த்தவாறே அழுகிறேன்.
"நன்றாக அழுங்கள் இந்த இனிமையான நேரத்தில் உணர்ச்சியை வெளிக்காட்ட இதுவே நல்லது"
என்றவாறே அந்த ஆண் தாதி என் குழந்தையின் தொப்புளோடு நீண்டிருந்த தாமரைக் கொடி போன்ற அந்தக் கொடியை வெட்டச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லியவாறே அழுதுகொண்டே இருந்தேன்.
குழந்தையை ஏந்திப் பிடித்துப் படுத்திருந்த என் மனைவி அருகில் வந்து காட்டி "இது உங்கள் குழந்தை" என்ற போது பாதி மயக்கத்திலும் விசும்பினார்.
அங்கிருந்து கடந்து என் மனைவியின் உறவுக்கார அக்காவைக் கண்டபோதும் மீண்டும் அதே நிலையில் கைகூப்பித் தொழுதே .

குழந்தை பிறக்க வேண்டிய தினத்தில் இருந்து முன்கூட்டியே பிறந்த காரணத்தால் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருக்கவேண்டும் ஆனால் பயப்பட ஏதுமில்லை என்றார்கள். சரவணப் பொய்கையில் உதித்த முருகனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தது போல இருந்தது அந்த மூன்று வாரங்களும் தாதியர் பராமரிப்பில் இருந்த என் குழந்தையைப் பார்க்கும் போது.  அந்த அனுபவங்களைக் கோர்த்து ஒரு தொடர் எழுத இருக்கிறேன். என்னைப் போலவே இம்மாதிரியான சவாலைச் சந்திக்கும் பெற்றோருக்கு அது உதவும் என்ற நோக்கில். பின்னர் தான் அறிந்து கொண்டேன் நான் சந்தித்த அந்தச் சீனத்தாதியே வற்புறுத்தி சத்திர சிகிச்சை செய்யுமாறு எங்கள் மகப்பேற்று வைத்தியரைத் தூண்டியதாகவும் அதன் பின்னரேயே எங்கள் குழந்தை காப்பாற்றப்பட்டது என்றும் அறிந்து கொண்டேன். ஆண்டவன் எல்லா ரூபத்திலும் வருவான்.

தந்தையர் தினத்துக்கு முந்திய நாள் வரை நாட்கணக்கில் எம் குழந்தைக்கு முருகனோடு சம்பந்தப்பட்ட பெயர் வைக்க வேண்டும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த போது சடுதியாக வந்துதித்தது,
"இலக்கியா"
என்ற பெயர். முருகன் தமிழ்க்கடவுள், இந்தப் பெயரும் தமிழோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற பெரும் திருப்தியோடுன் இருந்த எனக்கு, இந்தப் பெயர்  குறித்த மேலதிக விளக்கங்களை இணையத்தில் தேடிய போது "இலக்கியா" என்ற பெயர் கார்த்திகை நட்சத்திரம் சார்ந்தது என்று  தெரிந்த போது இன்ப அதிர்ச்சி.

இலக்கியாவை வெள்ளைக்காரன் எப்படிக் கூப்பிடுவான் என்று நம்மவர் சிலர் கேட்டபோது, ரஷ்யாக்காரனை எப்படிக் கூப்பிடுவானோ அதை விட இலகுவாக என்றேன் நான். என் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என்ற உறுதியில் இருந்து நான் விலகவில்லை.  நான் மதிக்கும் தமிழ்ப்புலவர் ஒருவர் "இலக்கியா" என்று என் பிள்ளைக்குப் பெயர் வைத்ததைக் கேட்டுத் தானாகவே என்னை அழைத்து "அதானே பார்த்தேன் தமிழ்ப்பெயர் வைக்காவிட்டால் உம்மை நான் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பேன்" என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.
தந்தையர் தினத்தில் மல்கோவா மரியன்னையிடம் சென்று பிரார்த்தித்து விட்டு, துண்டுச்சீட்டில் "இலக்கியா" என்ற பெயரை உத்தியோகபூர்வமாக எழுதி அறிவிக்கிறேன் மாதாவிடம்.

என்னுடைய விரத நாட்களில் நான் பிறந்ததில் இருந்து இன்று வரை தொடர்ந்து அனுஷ்டிப்பது நவராத்திரி விரதமாகும். நவராத்திரி காலத்தில் சரஸ்வதி பூஜை நாளில் எங்கள் பிள்ளையை வீட்டுக்குப் போக அனுமதித்தார்கள்.

தாயிடம் பால் குடித்து விட்டு என் கை மாறும் குழந்தையை மடியில் வைத்து "பாட்டி வடை கதை" யில் இருந்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். உன்னிப்பாகக் கேட்பது போல முகத்தை வைத்துக் கொள்வாள்.
"அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை என் பொன்னம்மா பொன்னம்மா" என்று நான் இளையராஜா குரலெடுத்துப் பாடவும் விநோதமாக என்னைப் பார்த்துத் சிரிப்பாள். இதெல்லாம் ஒரு மாதக் குழந்தைக்கு ரொம்பவே அதிகம் என்றாலும் இதெல்லாம் இத்தனை ஆண்டுகாலம் என் மனக்கேணியில்த தங்கியிருந்த ஆசையால் விளைவது.

விஜயதசமி நாளில், எங்கள் இலக்கியாக்குட்டி பிறந்து ஒரு மாதம் நிறைந்த நாள் சடங்கும் வந்தது எதிர்பாராத இன்னொரு இன்ப அதிர்ச்சி.  அன்று காலை சிட்னியில் இருக்கும் எங்களூர் ஐயர் வந்து முறையான சடங்குகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்.  ஒவ்வொரு வாரமும் சிட்னி முருகன் கோயிலின் வெளி வீதியில்  படியேறாமல் நின்று பூஜையை மனக்கண்ணால் கண்டு தரிசிப்பேன். நான்கு வாரங்களின் பின் தீட்டுக் கழித்து இன்று தான் சிட்னி முருகன் கோயிலுக்குள் சென்று "இலக்கியா"வுக்கு அர்ச்சனை செய்தேன். அர்ச்சனை முடிந்து  "இலக்கியா" என்று குரலெழுப்பி என் அர்ச்சனைத் தட்டை அர்ச்சகர்  தந்தபோது ஏற்பட்ட ஆனந்தம் சொல்லிலடங்காது. சிட்னி முருகன் சிரித்துக் கொண்டிருப்பது போல என் மனசு பேசிக்கொண்டது.

என் குழந்தை எப்படியெல்லாம் வளர வேண்டும் என்று எனக்கு எந்தவொரு உயர்ந்த இலட்சியமும் இல்லை.
"பெரியாட்களிடம் மரியாதையோட பழக வேணும், மற்றவர் மனங்கோணாமல் இருக்க வேணும்"
என்ற எதிர்பார்ப்புடனேயே இலக்கியாவை வளர்க்கப் போகிறேன். அதுதான் என் தந்தை எனக்கு உபதேசித்த மந்திரமும் கூட.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் (என் ராசாவின் மனசிலே) பற்றி ஆனந்த விகடனில் எழுதிய துணுக்கில் அப்போது அவரின் குழந்தை பிறந்த போது அதன் ஒவ்வொரு அசைவுகளாகப் படமெடுத்து வைத்திருப்பார் என்று. அதை நினைவில் வைத்துக் கொண்டு இலக்கியா பிறந்த நாளில் இருந்து அவரின் ஒவ்வொரு மாத வளர்ச்சியைப் படமெடுத்து வைத்திருக்கிறேன்.
அத்தோடு இலக்கியாவின் தந்தையின் பார்வையில் இத்தோடு 88 பதிவுகளையும் எழுதி
 "இலக்கியா அப்பா" என்ற வலைப்பதிவை உருவாக்கி அதை இங்கு பகிர்கிறேன். 
http://ilakkiyaappa.blogspot.com.au

இலக்கியாவைப் பற்றி இணையத்தில் பேச ஆரம்பித்த பிறகு, எங்களைப் போலக் குழந்தைப் பேறின் சவாலைச் சந்தித்தவர்கள் சிலர் என்னிடம் மனம் விட்டுத் தனிப்படப்பேசியிருக்கிறார்கள்.   குழந்தைப் பாக்கியம் கிட்டிய தங்களின் சந்தோஷத்தை என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள். இதைத் தான் என் வெளிப்படையான பகிர்வின் ஒரு திருப்தியாக உணர்கிறேன். இலக்கியாவின் ஒவ்வொரு புதிய அசைவையும் நான் அதீதமாகவே அனுபவித்ததன் வெளிப்பாடு அது.

"என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
 எந்த இலக்கணக் கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
முந்நூறு மொழிகளில் வார்த்தையில்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா என்
தங்கத்தை மார்போடு அணைக்கையிலே"

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எங்களுக்கு உயிர் கொடுத்த அன்பு மகளே! ❤️