Thursday, December 31, 2015

இழந்த என் இனிமைகளைக் கண்டு கொண்டாடிய 2015

Edit Posted by with No comments
2015 ஆம் ஆண்டின் பயணம் மெல்லத் தன் நிறைவிடம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது எழுதிக் கொண்டிருக்கிறேன். பக்கத்தில் இலக்கியா உறங்கிக் கொண்டிருக்கிறார்.
"பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட 
 இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே"
இதோ ஒரு மணி நேரம் முன்பு தான் இலக்கியாவைப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து அழைத்து வரும் போது இதே பாடலைக் கேட்டேன், அன்று போல இன்றும் கண்கள் பனித்தன. 
"உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தைக் காட்டச் சொல்லு
 புது இடம் புது மேகம் தேடிச் செல்வோமே"
பாடலாசிரியர் தாமரை எவ்வளவு தூரம் அனுபவித்து அந்தப் பாடலின் ஓவ்வொரு வரிகளை எழுதியிருப்பாரோ அவ்வளவுக்கவ்வளவு இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய அனுபவங்கள் எல்லாம் கலந்து கட்டித் திரட்டித் தந்தது போல இருக்கும்.

நரேஷ் ஐயர் இந்தப் பாட்டை ஆரம்பிக்கும் போது மெல்ல மெல்ல ஒடுங்கிக் போய் மனசு சரணாகதி அடைந்து போய் விட நாலாவது நிமிடத்துளியில் மஹதி கொடுக்கும் "ஆஹாஹா" என்ற ஆலாபனையில் அப்படியே உடைந்து அழுது விடுவேன். 
இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு என் வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பாட்டு வெளிவந்த இந்த ஆண்டில் எம் செல்வ மகள் இலக்கியாவின் பிறப்பின் ஒவ்வொரு சதவிகித வளர்ச்சியையும் மிக நெருக்கமாகப் பார்த்துக் கொண்டே வரும் எனக்கும் என் மனைவிக்கும் கூட இந்தப் பாட்டு மிக நெருக்கமாக உட்கார்ந்து விட்டது.
இடம், பொருள், ஏவல் இல்லாது இந்தப் பாட்டு என்னைக் கடக்கும் போதெல்லாம் அதே உணர்வு. இந்த ஆண்டின் ஒரு நாள் விடிகாலை ஆறுமணிக்கு உடற்பயிற்சி நிலையத்தில் ஓட்டப் பயிற்சி எடுக்கும் போது காது வழியே புகுந்த பாட்டு கண் வழியே வழிந்தோடியது.

உலகத்தில் எத்தனை செல்வங்களை அள்ளிக் கொட்டினாலும் ஒரு குழந்தை தன் படிமுறை வளர்ச்சியைத் தன் பெற்றோருக்குக் காட்டிக் கொண்டே வாழும் வாழ்க்கையை நாம் அனுபவிப்பது போல ஒன்றுமே கிடையாது.
இலக்கியாவின் முதல் மூன்று மாதங்கள் கடந்த ஆண்டில் நிறைந்து இந்த ஆண்டில் அவர் முழுமையான ஒரு குழந்தையாக வளரும் போது அவருக்குக் கிட்டிய சந்தோஷங்களில் சிரித்தோம், கவலைகளில் அழுதோம். அவருக்கு நோய், நொடி வரும் போது எம் உடலின் ஒரு பாகம் வெளியில் நின்று அந்தரிப்பது போல இருக்கும். 
ஆண்டவன் மீதான நம்பிக்கையும், வாழ்க்கையில் பிடிப்பையும் இன்னும் அதிகமாக ஏற்படுத்தி விட்ட ஆண்டு 2015.
இலக்கியாவின் பிறந்த நாளை அதே நாளில் நாம் பிறந்து வளர்ந்த தாயகத்தில் எம் பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்தது போன்ற மறக்க முடியாத பதிவுகளை இந்த ஆண்டு ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. இந்த ஆண்டில் எந்தக் காரியம் செய்ய முனைந்தாலும் இலக்கியாவை முன் வைத்தே முடிவுகள் அமைந்திருக்கின்றன.
கவலைகளும், கஷ்டங்களும் மிகுந்த ஆண்டாக இருந்தாலும் சந்தோஷங்களைச் சரி சமமாகப் பங்கிட்ட வகையில் இந்த ஆண்டு மிகவும் நிறைவான ஆண்டாகவே எங்களுக்கு அமைந்திருக்கிறது.
இலக்கியா இப்போது நம் செயல்களை உன்னிப்பாகப்  பார்த்து தானே செய்து பார்க்கவும், நாம் பேசும் போது அதே போலத் தன் மழலையில் பேசிப் பார்க்கவும் முனைகிறார். 
தானே உடம்பைப் பிரட்டி, எழுந்து நடக்கவும், பேசவும் கற்றுக் கொள்ளும் குழந்தையை விடவா நாம் சாதித்து விட்டோம்.

வாழ்க்கை எனும் ஓடம் யாருக்காகவும் காத்திருக்காது, வழித் துணையாக வந்தவர்கள் வழிகாட்டி விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் நிரந்தர ஓய்வெடுத்த ரணம் மனதுக்குள் இருந்தாலும் வாழ்ந்து கழித்து விட வேண்டும் அதுவும் எமக்குப் பிடித்த வாழ்க்கையாக, மற்றவர்களின் அளவுகோலுக்கு அமைவாக அல்ல என்ற நெஞ்சுரம் தான் இந்த ஆண்டையும் வெகு நிம்மதியாகக் கடத்தியிருக்கிறது.

" ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழே
   அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல"

2015 ஆம் ஆண்டு தந்த அதே நம்பிக்கையோடு 2016 ஆம் ஆண்டுக்குப் பயணிக்கிறோம் நாம்.

Friday, December 25, 2015

பல்லுக் கொழுக்கட்டை கொட்டினோம்

Edit Posted by with No comments
ஆயிரம் தந்த இசைஞானியின் இசை பரவ இலக்கியாவுக்குப் பல்லுக் கொழுக்கட்டை  🍼

காலை ஐந்து மணி சிட்னி முருகன் சந்நிதியடைந்து திருவெம்பாவைப் பாடல்களோடு காலைப் பூசையுமாக உள்ளம் உருகித் தொழ திருவெம்பாவை நன்னாளின் பொழுது புலர்ந்தது.

கிறிஸ்துமஸ் இன்று ஏசு பாலனின் பிறப்பினைக் கொண்டாட சிட்னியின் புற நகர்ப் பகுதியில் இருக்கும் மல்கோவா மரியன்னை ஆலயத்தில் சங்கமம்.

இந்த இரண்டு பயணங்களையும் இணைக்கிறது இசைஞானியின் "தாரை தப்பட்டை"

இன்று இலக்கியாவுக்கு "பல்லுக் கொழுக்கட்டை" சடங்கு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தோம். திருவெம்பாவை, கிறிஸ்துமஸ் இவற்றோடு இந்த ஆயிரமாவது இசைப் படையலும் சேர்ந்து விசேஷமாக்கி விட்டது.

"பல்லுக் கொழுக்கட்டை" குழந்தைக்குப் பற்கள் வளர ஆரம்பிக்கும் போது அந்த வளர்ச்சியைக் கொண்டாட நாம் எடுக்கும் வீட்டுத் திருவிழா என்பது மரபு.
கொழுக்கட்டை இதழ்களில் பற்களைப் போல் வெள்ளைத் தேங்காய்ச் சொட்டுப் பதித்துத் தயாராகி விட்டது அழகழகான பல்லுக் கொழுக்கடைகள். 
இரண்டு ஆலயங்களுக்குப் போய் வந்து இறை ஆசியோடு இலக்கியாவை மேடையில் இருத்தி அவர் மேல் பல்லுக் கொழுக்கட்டைகளைக் கொட்டிக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

என் இசைத் தாய் இளையராஜா சுரந்த
1000 வது குழந்தை  "தாரை தப்பட்டை.
ஒவ்வொரு பாடலாக காதுகளால் வழித்து எடுத்துப் பத்திரமாக உடலெங்கும் பரவவிடுகிறது அந்தப் பரவச நிலையில்

இறுதிச் சொட்டாக "Theme"  ஆரம்பிக்கவும் மயிர்கால்கள் குத்திட்டு கண்களில் நீர் உடம்பெல்லாம் ஆவியாகி மேலெழுமாற் போன்றதொரு உணர்வு.
இது பொய்யல்ல மெய்யே.

பாருருவாய பிறப்பற வேண்டும் 
பத்திமையும் பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே 
செங்கமலம் மலர்போல்
ஆருருவாய என் ஆரமுதே 
உன்அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி 
என்னையும் உய்யக் கொண்டருளே.