Thursday, February 25, 2016

இலக்கியா என்ற காக்கைக் குஞ்சு

Edit Posted by with No comments

மெல்ல மெல்லத் தள்ளாடி எழுந்து, இருக்கவா நிக்கவா என்ற தோரணையில் தள்ளாட்டம் போட்டு எழுந்து நிற்பதையெல்லாம் கடந்து விட்டார் இலக்கியா. இப்போதெல்லாம் எழும்பும் போதே மகா விஷ்ணு கணக்காக இரண்டு கைகளிலும் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு எழும்பி நடக்கும் கலையைக் கற்றுத் தேர்ந்து விட்டார்.
அதாவது "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" சிவகுமாரில் இருந்து இப்ப பில்லா "தல" நடை மாதிரி.
இலக்கியா நடக்கும் போது கையில் வைத்திருக்கும் பொருட்களில் சீப்பு, குழந்தைக்கான சருமப் பராமரிப்பு கிறீம், உடல் வெப்பநிலையை அளக்கும் வெப்பமானி போன்றவை அடங்கும். 
விளையாட்டுப் பொருட்கள் ம்ஹும்.

போன வார இறுதியில் குழந்தைகளுக்கான கடையில் வாங்கிய இசைப் பெட்டியில் புல்லாங்குழல், சலங்கை கட்டிய கஞ்சிரா ,Xylophone எல்லாம் இருந்தது. அவற்றைப் பிரித்துக் காட்டினேன். ஏதோ சந்திர மண்டலத்தில் காலடி வைத்தது போலப் புழுகம் கொண்டு எட்டி அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.
இலக்கியாவின் அம்மா புல்லாங்குழலில் இருந்து ஒவ்வொரு வாத்தியமாக வாசித்துக் காட்டினார். 
Xylophone இன் குச்சியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்துப் பார்த்தார். பின்னர் புல்லாங்குழலால் Xylophone ஐ சூப்பர் சூப்பராயனின் சண்டைக் காட்சி போல ஒரு கையால் வில்லனை அடிக்கும் தோரணையில் அடி கொடுத்தார்.
இப்போது நான் புல்லாங்குழலை வாங்கி வாசித்துக் காட்டினேன். 
ஆகா இப்ப பிடிச்ச்ச்ச்சுட்ட்ட்டேஏஏஏஏன் என்பது போலக் கொக்கட்டம் விட்டுச் சிஎஇத்து விட்டுப் புல்லாங்குழலை வாங்கி வித விதமாக ஊதினார். அவரின் வாயில் இருந்து வரும் காற்றை விட உடம்பின் குலுக்கல் கொஞ்சமென்ன ரொம்பவே அதிகம் :-)
ஆனால் கொஞ்ச நேரத்தில் தொழிலைக் கற்றுத் தேர்ந்து விட்டார். 
சலங்கை கட்டிய அந்தக் கஞ்சிராவைத் தன் தலையில் தொப்பி மாதிரி மாட்டி விட்டு, புல்லாங்குழலை வாயில் வைத்து ஊதிக் கொண்டே Xylophone ஐ ஒரு குச்சியால் அடித்துக் கொண்டிருந்தார். சிங்காரவேலன் "கககா கிகீகீ குகூகூ புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பாட்டு ஒண்ணு படிச்சேன்" கமல் மாதிரி இருந்தது.

நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் இலக்கியாவை எனது அறையில் நடக்க விட்டு விட்டு என்ன செய்கிறார் என்று ஓரமாக நின்று பார்த்தேன்.
அந்த அறையின் ஓரத்தில் இலக்கியாவின் கழுத்தளவு உயரமான ஒரு மேசை. அதில் ஒரு விரிப்பு, விரிப்பின் மேல் இலக்கியாவின் அம்மாவின் கலர் கலரான பிளாஸ்டிக் செயற்கைச் சங்கிலிகளும் அந்த மேசையின் மற்றைய அந்தத்தில் ஒரு சாவிக் கொத்தும் இருந்தது. 
இலக்கியா நேராக அங்கே போனார். அந்தச் செயற்கை நகைகளில் தான் கண் வைத்திருக்கிறார் என்று நினைத்தேன். அதையும் தாண்டிப் புனிதமானது என்பது போல
அந்தச் சாவிக் கொத்தைத் தான் எடுக்க வந்திருக்கிறார். 
நின்ற இடத்திலேயே தன் கையை நீட்டி அந்தச் சாவிக் கொத்துக் கைக்கு வருகுதா என்று பார்த்தார். ம்ஹும். 

இன்னும் நீளமாகத் தன் கையை நீட்டிப் பார்த்தார் ம்ஹும் இப்பவும் எட்டுதில்லையே

பின்னர் உடம்பை எக்கி இன்னும் கொஞ்சம் கையை நீட்டி ம்ஹும் இதுக்கு மேல கை நீட்டினா நான் விழுந்துடுவேன் என்று பிள்ளை நினைத்திருப்பார்.

அரை விநாடி யோசனை தான். மெல்ல மெல்ல அந்த மேசையின் மேலிருந்த விரிப்பை முன்னே இழுத்தார். அந்த விரிப்பின் அடுத்த கரையில் இருந்த சாவிக் கொத்து இப்போது வெகு இலகுவாக இலக்கியாவின் கைக்குப் பக்கத்தில். 
ஆனால் அதற்குள் இன்னொரு விபரீதம். அவர் அந்த விரிப்பை இழுக்கும் போது அம்மாவின் சங்கிலி, வெப்பமானி இரண்டும் கீழே விழுந்து விட்டது. 
இலக்கியாவின் அம்மா தான் ஒழுங்காக அடுக்கி வைத்ததில் ஒன்று நிதானம் தப்பினாலும் 
ருத்ரமாதேவி ஆகி விடுவாரே.
கீழே குனிந்து ஒவ்வொன்றாக எடுத்து மேலே வைத்தார்.
பரவாயில்லையே அப்பா போல "அந்தப் பயம் இருக்கட்டும்" :-))

இப்போது எல்லாம் சரியாகி விட்டது. இனி அந்தச் சாவிக் கொத்தை எடுக்கலாம் என்று இலக்கியா தன் கையை நீட்டி அதை எடுத்து ம் பிறகென்ன வாயில் வைத்துச் சுவைக்கப் போனார்.

தன் தாகம் தீருவதற்காக காக்கா ஒன்று நீர் ஜாடியில் கற்களை நிறைத்துப் பின் அந்த நீர் மேலே வந்ததும் குடித்தது போல எங்கள் வீட்டு 17 மாத காக்கைக் குஞ்சு இலக்கியாவின் விளையாட்டு இது.

Sunday, February 21, 2016

புல்லாங்குழலை ஊதி

Edit Posted by with No comments
நேற்று வீடு முழுக்க இசைக்கச்சேரி முழக்கம், வாயில் புல்லாங்குழலை வைத்து ஊதியவாறு மத்தாளத்துக்கு அடி கொடுத்த இலக்கியா

"மாங்குயிலே பூங்குயிலே"

Edit Posted by with No comments
இளையராஜா ஆர்மோனியம் வாசித்து "மாங்குயிலே பூங்குயிலே" பாட அதைப் பார்த்துக் கொண்டே இலக்கியா துள்ளல் 😄

Saturday, February 20, 2016

இருமல் எடுத்த இலக்கியா

Edit Posted by with No comments
இருமல் எடுத்த இலக்கியாவின் முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தினார் தாய் இலக்கியா இருமி விட்டு தன் முதுகைக் கையை வளைத்துத் தட்டப் பார்க்கிறார் 🙄

Friday, February 19, 2016

"அக்கா"

Edit Posted by with No comments
இலக்கியா தன் சட்டையில் இருக்கும் இந்த உருவத்தைக் காட்டி "அக்கா"வாம் 😀😀😀

Wednesday, February 17, 2016

"பாட்டுப் பாடவா"

Edit Posted by with No comments
"பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா" பாடலின் தாள லயத்துக்கேற்ப தலையாட்டும் இலக்கியா 😀 கடந்த இசை

Wednesday, February 3, 2016

இலக்கியா 🐿 மாதங்கள் 17

Edit Posted by with No comments

தனது 16 வது மாதத்தில் தான் இலக்கியா "அம்மா" என்ற வார்த்தையைப் பாவிக்கக் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன்பெல்லாம் "அம்மா சொல்லுங்கோ" என்று கேட்டால் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டே சூழலைத் திருப்பி விடுவார். தன் தாயை ஏதோ ஆத்ம நண்பரோடு பழகுவது போலத்தான் இலக்கியாவுக்கும் அவரது தாய்க்குமான பந்தம்.

"ரச தந்திரம்" படத்தில் மோகன்லால் நாயனக்காரர் ஒடுவில் உன்னிகிருஷ்ணனோடு பேசும் போது ஒரு நையாண்டிச் சிரிப்பை உதிர்ப்பார். இலக்கியாவின் அம்மாவுக்குச் சிரிப்பு மூட்டுவதற்காக இந்தச் சிரிப்பை அடிக்கடி செய்து காட்டுவேன் இலக்கியா தன் தாயின் வயிற்றில் இருந்த காலத்திலும். இப்போது எங்களோடு மட்டுமன்றி விருந்துபசாரங்களில் நண்பர்களோடு கூடும் போது மற்றவர்கள் சிரிப்பது போல இந்த மாதிரி நையாண்டிச் சிரிப்புக் காட்டுவது இலக்கியாவின் வழக்கமாகிவிட்டது அவ்வ் 😀

இலக்கியா நித்திரை கொள்ளாது அடம் பிடிக்கும் போது பக்கத்தில் படுத்திருந்து கண்ணை மூடிக் கொண்டே குறட்டை விடுவது போலப் பாவனை செய்தவாறு இலக்கியாவுக்குத் தெரியாமல் இலேசாகக் கண்ணைத் திறந்தால் பக்கத்தில் இருந்து இலக்கியா நான் செய்தது போலக் குறட்டை விட்டுக் காட்டி விட்டுச் சிரிப்பார் ஙே 🙄

இலக்கியாவின் பாட்டுக் கேட்கும் ஆர்வமும், நடன ஆர்வமும் கட்டுக்கடங்காது பெருக்கெடுத்து விட்டது. மெலடிப் பாட்டு ஏதும் போனால் பின்னால் ஒரு ஆஆஆ என்ற ஆலாபனை அந்த மெட்டுக்கு இசைவாகப் போகும். அந்த ஆலாபனையை வேறு யார் கொடுப்பார்களாம் 😀
துள்ளிசைப் பாட்டின் தாள லயத்துக்கு ஏற்ப கைகளை முறுக்கியும் சுழற்றியும் தலையை ஆட்டியும் ஆட்டம்ஸ் கொடுப்பார் இலக்கியா

இலக்கியாவுக்கு முதன் முதலாக பிஸ்கெட்டை அவர் கையில் கொடுத்தோம். தன் விளையாட்டுப் பொருளை எறிவது போல இதுக்கும் பாவனை பிடித்து எறிந்து பழகினார். பின்னர் அவரின் கையில் இருந்தே வாயில் மெல்லத் திணித்துக் காட்டினேன். இப்போது பழகி விட்டார்.

தனக்குப் பசிக்கிறது என்பதைப் பால் போத்தலைக் காட்டிக் கேட்பதன் மூலம் இலக்கியா தன் தேவையை வேண்டுகோள் விடுக்கும் முறைக்குப் போய் விட்டார். 

இப்போது நடை பயிலப் பிடிக்கும். ஆனால் இதிலும் தன்னம்பிக்கையின் சிகரமாகக் கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடப்பது. இப்போது இரண்டு கையிலும் பொருளைத் தூக்கிக் கொண்டு போகும் அளவுக்கு 😊
ஒளிச்சுப் பிடிச்சு விளையாடப் பிடிக்குமாம். என்னடா பக்கத்தில் இருந்த ஆளைக் காணோமே என்று பார்த்தால் போர்வைக்குள் இலக்கியா ஒளிச்சிருப்பாவாம் அவ்வ்
தன்னுடைய ஒரு கண்ணைத் தன் கையால் மூடியும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம் என்பது இலக்கியாவின் புதிய கண்டு பிடிப்பு 🙄
அதுக்காக FaceTime இல் லண்டனில் இருக்கும் தன் பெரியப்பாவுடன் கதைக்கும் போதும் ஒளிச்சிப் பிடிச்சு விளையாடுவது கொஞ்சம் அதிகம் தான் இலக்கியா 😀 
தெரியாதவர்களைக் கண்டால் தன் தாயின்/ தந்தையின் தோளில் முகம் புதைத்துக் கொள்வாராம்.

இலக்கியாவின் அப்பா கதைப் புத்தகம் படித்தால் ஆர்வமாக அதைக் கொஞ்சூண்டு கேட்டு விட்டுப் பின் புத்தகத்தை வாங்கி அதைச் சுவைக்கப் பார்ப்பார். ம்கும்

தன் பக்கத்தில் சீப்பு இருந்தால் சீப்பால் தலையை வார முயற்சிப்பார். தலையில் இருக்கும் க்ளிப்பைக் கழற்றித் தானே செருகப் பார்ப்பார்.

விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறியது, இறங்கியது வரை எதிர்ப்படுவோருக்குப் பு
தேர்தல் கால அரசியல்வாதியாட்டாம் கையை நீட்டித் தன் கையில் தொட வைப்பதும், கையசத்து வழியனுப்பதுமாக ஒரு வழி பண்ணினார்.


விளையாட்டுப் பொருட்கள் மீதான ஆர்வம் சுத்தமாக இல்லை. வாங்கிக் கொடுத்த பழைய காலத் தொலைபேசி போன்ற விளையாட்டுச் சாமானின் கழுத்தைத் திருகி விட்டுத் தன் தொட்டிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டது சமீபத்திய பயங்கர நடவடிக்கை.

கார்ச் சாவியில் இருந்து இலக்கியாவின் விளையாட்டுப் பொருள் எல்லாம் விலை மதிக்கத்தக்கது.

எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை உன்னிப்பாகப் பார்த்து விட்டுப் பேசிப் பார்ப்பது, செய்து பார்ப்பதுமாக இலக்கியாவின் திருவிளையாடல்கள்.


தன் தாய்க்கும், தந்தைக்கும் பாசக் கணக்கில் சம பங்கு வைக்க வேண்டும் என்பது இலக்கியாவின் கொள்கை. இருவருமே தன் பக்கத்தில் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் இலக்கியாவின் அப்பா நகர்வலம் 
போவதென்றால் இலக்கியாவின் கண்ணில் படாமல் தான் நகர்வாராம். ஆனால் இலக்கியா இல்லாத இடத்தில் இமைப் பொழுதும் இலக்கியா நினைப்புத் தான் அப்பாவுக்கு. 

http://youtu.be/Q_DPO48tB_U