Tuesday, October 11, 2016

இலக்கியாவுக்கு ஏடு தொடக்கல் 📚

Edit Posted by with No comments


இந்த ஆண்டு விஜயதசமி நாளில் இலக்கியாவுக்கு ஏடு தொடக்கச் சொல்லி ஊரில் இருந்து இலக்கியாவின் அப்பம்மாவின் வேண்டுகோள் வந்தது.
சிட்னியை ஆட்டிப் படைக்கும் வைரஸ் காய்ச்சலால் எங்கள் வீட்டில் மூவருமே மாறி மாறிப் பாதிக்கப்பட்டதால் எதையும் தீர்மானமாக முடிவெடுக்காத நிலையில் நேற்று முன் தினம் தான் சரி இலக்கியாவுக்கும் வயது இரண்டாகி விட்டது ஏடு தொடக்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

நாங்கள் ஊரில் இருந்த காலத்தில் தம்பி வாத்தியார் தான் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலின் மூலஸ்தானத்தை நோக்கிய வழிபாட்டிடத்தில் இருந்து ஏடு தொடக்குவார். மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலையின் அதிபர் கனகராசா அவர்கள் பனையோலையில் அச்சிட்ட ஆனா ஆவன்னா எழுத்துகளோடு கூடிய அந்த ஏடுதான் ஏடு தொடக்கலின் மூல ஆவணம்.

இன்று காலை மூவருமாகச் சிட்னி முருகன் கோயிலுக்குப் போனோம். காலை ஏழு மணிப் பூசை கணக்காக ஆரம்பித்தது. பூசை முடிந்து மணி ஏழு முப்பது காட்டவும், கோவிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பிள்ளையார் சந்நிதியில் ஐயர் வந்து ஏடு தொடக்கலுக்கு ஆயத்தப்படுத்தினார். இலக்கியா பிறந்த முப்பத்தோராம் நாள் நான் கோயிலுக்குப் போன சமயம் கையில் இருந்த கற்பூரச் சரையை எதிர்ப்பட்ட ஐயரிடம் கொடுக்கவும், "கடவுள் மாதிரித் தந்தீர்கள் இப்ப தான் கற்பூரம் தீர்ந்தது" என்று சொல்லி வாங்கிப் போன அதே ஐயர் தான் என்பதால் உள்ளூரச் சந்தோஷம்.

ஐயருக்கு முன்னால் சப்பாணி கட்டி இலக்கியாவோடு அமர்ந்தேன். இலக்கியாவுக்கு ஒரே புதினமாக இருந்தது. ஐயரைப் பார்த்துச் சிரித்தார்.
"ஆனா ஆவன்னா சொல்லுவாவோ" என்று ஐயர் கேட்டார்.
"இல்லை ஐயா"
(இதுக்கெல்லாம் பயற்சி எடுத்துக் கொண்டு வருவார்கள் என்று பின்னர் கண்டு கொண்டேன் :-)

ஐயர் தன்னிடமிருந்த எழுத்துச் சுவடியில் இருக்கும் உயிரெழுத்துகளில் இருந்து ஆரம்பித்தார்.

ஐயர் : ஆனா

இலக்கியா : ஆஆஆன்ன்ன்னா என்று ஒரு இழுவை இழுத்து விட்டு அம்ம்மா என்று ஐயருக்குச் சொல்லிக் காட்டினார். "அ" என்றால் அம்மா தானே என்பது இலக்கியாவின் வியாக்கியானம்

ஐயர் : ஆவன்னா

இலக்கியா : ஆஆஆஆஆன்ன்னன்னா
(ஆவன்னா எனக்கு வராது அதனால் தன்னன்னா போட்டு முடிச்சிடுவம் என்று நினைத்தாரோ :-)
அதோடு விட்டாரோ தன் அம்மாவைச் செல்லப் பாஷையில் கூப்பிடும் "மம்மம்மா" என்று ஐயருக்குச் சொல்லிக் காட்டினார்.

ஐயர் : ஈனா

இலக்கியா : ஈனா என்று படாரென்று சொல்லி விட்டு ஐயருக்குத் தன் அம்மாவைக் காட்டி அம்மா என்று அறிமுகப்படுத்தினார் (ரெம்ப முக்கியம் :-) )

சூழ இருந்த கூட்டத்துக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.

பிறகு தட்டத்தில் நிரம்பியிருந்த வெள்ளை அரிசியை ஐயர் பரப்பி வைக்கத் தானும் அது போலச் செய்து பார்த்து விட்டு அடுத்தது என்ன என்று ஐயரை ஏறிட்டுப் பார்த்தார்.
இம்முறை இலக்கியாவின் அப்பாவே ஆனா ஆவன்னா சொல்லி, ஏபிசிடி சொல்லி, இலக்கங்களையும் சொல்லிக் கொண்டே இலக்கியாவின் விரலைப் பிடித்து ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தார்.

ஐயர் தட்டத்துடன் எல்லாவற்றையும் கையளித்தார்.

எல்லாம் இனிதாக நடத்தி முடிச்சாச்சு என்ற வெற்றிக் களிப்பில் ஐயரைப் பார்த்து
"Byeeeeeeee" என்று சொல்லி டாட்டா காட்டி விட்டு அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டார் இலக்கியா