Wednesday, August 24, 2016

இலக்கியா குழப்படி

Edit Posted by with No comments
இலக்கியா குழப்படி செய்தால் கண்களைப் பொத்தி அழுவதைப் போல நடிப்பேன் இப்போதெல்லாம் அப்படிச் செய்தா என் முகத்தில் சாய்ந்து சமாதானம் செய்வாராம் 😀

Friday, August 19, 2016

"அப்பா"

Edit Posted by with No comments
முதல் தடவையாக இலக்கியா என்னை ஆசை தீர அழைத்த வார்த்தை. 
"அப்பா அப்பா அப்பா" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் இன்று. இத்தனை நாளும் சொல்லாதைச் சொல்லிக் காட்ட வேண்ட வேண்டும் என்ற அவதி போல.

வேலைக்கு வரும் அந்த விடிகாலை ரயிலில் சந்தடியில்லாத இடத்தின் இருக்கையில் இருந்து அழுது கொண்டே வந்தேன் இந்தப் பாட்டைக் கேட்ட படி.

"இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி"

https://www.youtube.com/shared?ci=VTX4w-26U_s

Wednesday, August 3, 2016

இலக்கியா எங்களோடு 23 மாதங்கள் 🐇

Edit Posted by with No comments

நேற்று இலக்கியாவைப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து அழைத்து வரவேண்டிய பொறுப்பு எனக்கு. சக குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவர், என்னைக் கண்டதும் "ம்மா" என்று உரக்கக் கத்திக் கொண்டே குறுகுறுவென்று ஓடி வந்தார். அள்ளித் தூக்கி உச்சி மோந்தேன். என் இடுப்பில் ஏறியவர் தூரத்தில் இருக்கும் பொருள் ஒன்றைக் காட்டித் தன் மழலைக் குரலில் ஏதோ சொன்னார். நானும் புரிந்தது போல ஆர்வமாகக் கேட்டுக் கொண்டே ஆமோதித்தேன். என்னைக் கண்ட புழுகத்தில் திரும்பத் திரும்ப என் முகத்தையே பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.

இலக்கியா தன் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாட இன்னும் ஒரு மாதமே காத்திருக்கிறது. இன்று வரை அவரின் தாயும் "அம்மா" தான் தன் தந்தையும் "அம்மா" தான்.
எங்கள் இருவர் மீது கொண்ட தன் நேசத்தைப் பங்கிட வேண்டும் என்று நினைத்திருக்கிறார் போல.

பாடல்களில் "ஆஆஆ" "லாலலா" போன்ற ஆலாபனைகள் வரும் போதெல்லாம் அது போலப் பாடிப் பார்த்து ரசிக்கும் இலக்கியா இடையில் வரும் சத்தங்களையும் பிரதி பண்ணத் தொடங்கி விட்டார். இன்று காலை காரில் வரும் போது "மஸ்தானா மஸ்தானா" பாட்டு போகுது, இரண்டாவது சரணத்தில் வரும் "மம்ம மம்ம" என்று கொடுக்கும் விநோத ஒலியையும் அதனோடு கூட வரும் சப்தத்தையும் பாடிப் பார்க்கிறார்.

பக்கத்தில் படுத்திருந்து கொண்டு போர்வையால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தன்னைக் காணவில்லை என்று செய்து காட்டினால் நாங்கள் பதை பதைத்துத் தேடுவது போலப் பாவ்லா செய்தால் தானே போர்வையை விலத்தி விட்டு விழுந்து விழுந்து சிரிப்பா.

எங்க பழகின பழக்கமோ தெரியேல்லை 
கை விரல்களை மடிச்சிக் கொண்டு கண்களை மூடி ஈஈஈ என்று அழுது காட்டுவார்.

ஏதாவது பொருளில் இலக்கியா அடிபட்டால் அந்தப் பொருளுக்கு அடி கொடுத்து வெருட்டுவதைப் பார்த்து விட்டு, ஒருமுறை கட்டில் சட்டத்தில் இலேசாக என் தலை முட்டுப் பட, கட்டில் சரமாரியாக அடியை வாங்கியது இலக்கியாவிடமிருந்து.

தண்ணீர்க் குழாயைப் பார்த்துப் பிள்ளையார் உருவம் என்று இலக்கியா கும்பிட்ட கதையைச் சொல்லியிருந்தேன். சுவாமிப் படமோ, சிலையோ கண்டால் இதே கதை தான் இப்போது.
திருநீற்றை அவரின் நெற்றியில் பூச என் கை கொண்டு போகும் கணம் வாகாக வாங்கிக் கொள்வார்.

நீட்டிய என் கைக்கு மேல் கிடந்து நித்திரை கொள்ளுவது இலக்கியாவுக்குப் பிடிக்கும்.
தனக்கு நித்திரை வரும் வரை பக்கத்தில் இருக்கும் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ வேடிக்கை விநோத விளையாட்டைக் காட்டிச் சிரிப்பார். வாயில் ரயில் விடுவதில் இருந்து சிங்கம், புலி, பறவை எல்லாம் வரும். 

நீ கேட்டிட பாட்டாகிறேன்
சோறூட்டிட தாயாகிறேன்
சுவை கூட்டிடக் கரும்பாகிறேன்
சுமை தீர்க்கவே மருந்தாகிறேன்
நான் இங்கு நானில்லை

👼

https://www.youtube.com/shared?ci=xN1bq8cqmVc