Monday, August 10, 2015

“சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”

Edit Posted by with No comments
இப்போதெல்லாம் “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” பாட ஆரம்பிக்கும் போதே இலக்கியா இருந்தவாறே தன்னிச்சையாக சாய்ந்து ஆட ஆரம்பித்து விடுவார்

Wednesday, July 22, 2015

ஏரோ ப்ளேன் ஓடிய இலக்கியா

Edit Posted by with No comments

இலக்கியாவுக்கு விளையாட்டுப் பொம்மைகளில் அதீத ஆர்வம் இல்லை என்பதை முன்னர் தவளைக் கதை வழியாகச் சொல்லியிருந்தேன். இங்கேhttp://www.twitlonger.com/show/n_1smjek2

இருந்தாலும் கலகலப்பாக இல்லாத வேளையில் அவரின் கவனத்தைத் திசை திருப்ப ஏதாவது செய்யணும் குமாரு என்று யோசித்து ஒரு வாத்தியப் பெட்டியை வாங்கிக் கொடுத்தேன். அதில் இருக்கும் ஒவ்வொரு நிறக் கட்டையும் ஒவ்வொரு மிருகம், பறவை போல ஒலியெழுப்பும், பாடும் ஆனால் ஆடாது. இலக்கியாவின் தொட்டிலில் அந்த வாத்தியம் ஒரு ஓரமாக இருக்கும். அவர் மூடி ஆக இருக்கும் போது அந்த விளையாட்டுப் பொருளில் ஏதாவது நிறக் கட்டையை அழுத்துவேன். அது கொடுக்கும் இசை ஒலியில் பாப்பா என்னைப் பார்த்துச் சிரிப்பார். நாளாவட்டத்தில் இலக்கியாவைத் தொட்டிலில் இறக்கிய அடுத்த கணமே அந்த விளையாட்டுப் பொருளின் ஏதாவது கலர் கட்டையை அழுத்தி விட்டு என்னைப் பார்ப்பார். நான் சிரித்ததும் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார் தொட்டிலின் மறு கரை நோக்கி. (இங்கே அவர் செய்யும் வேறு வேலை என்பது தொட்டிலின் ஓரம் இருக்கும் துணியில் பொறித்திருக்கும் அலங்காரங்களை வேடிக்கை பார்ப்பது)
நான் அவருக்காக வாங்கியதை எனக்கே அவர் விளையாட்டுக் காட்டும் நிலையாகிப் போனது :-)) அவ்வ்வ்


இளையராஜாவும் ஆர்மோனியப் பெட்டியும் மாதிரி இலக்கியாவும் இந்த இசைப் பெட்டியும் என்று ஆகிப் போன நிலையில், இது ஆவுறதில்லை வேறு ஏதாவது வாங்கிக் கொடுப்போம் என்று போன வார இறுதி ஒன்றில் தாயையும் மகளையும் அழைத்துக் கொண்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்கும் பெருங்கடை ஒன்றுக்குப் போனோம்.

திரும்பின பக்கமெல்லாம் விளையாட்டுப் பொருட்கள். பிறந்த குழந்தையில் இருந்து மாதக் கணக்கில் ரக வாரியாகக் குவிந்து கிடந்தன. எல்லாவற்றையும் இடைவேளைக்குப் பின் படையப்பாவைப் பார்த்த நீலாம்பரி கணக்காக அலட்சியப் பார்வை பார்த்து விட்டு எங்களோடு செல்லம் கொட்டிக் கொண்டிருந்தார்.
திடீரென்று இலக்கியாவையே அசர
வைத்தது ஒரு பொருள். அது சில்லுப் பூட்டிய விமான அமைப்பில் இருந்த ஒரு வாகனம். அதைக் கண்டதும் என் இடுப்பில் இருந்தவர் எட்டிப் பாய்ந்து அதன் காது போன்ற பாகத்தை முறுக்கினார். அது கொடுத்த விநோத ஒலியைக் கேட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். சரி பிள்ளை ஆசைப்படுதே என்று அந்த வாகனத்தில் இருத்தினேன். 
இருத்தின கணமே கியரை இழுத்து முறுக்கி, ஸ்டியரிங்கை வளைத்து ஒடித்து, உருளைகள் ஒவ்வொன்றையும் சுழற்றி இலக்கியா தேர்ந்த சாரதியாக மாறிப் போனார். காலால் உதைத்து முன்னுக்குத் தள்ளியும் பார்த்தார். 

ஆகா இதையே வாங்கிடுவோம் என்று பார்த்தால் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கான விளையாட்டுப் பொருளான் அது. பிரச்சனை இல்லை ஒரு வாரம் இதைக் கொண்டாடினாலே போதும் என்று சொல்லிவிட்டு வாங்கி வந்தேன்.

ஒரு வாரமாக இதோ அதோ என்று இழுபட்டு நேற்றுத்தான் வாங்கிய அந்த விமானத்த்தின் பாகங்களை இணைத்து முடித்தேன். இம்மாதிரியான கழற்றிப் பூட்டும் காரியங்களில் என் அறிவு மைனஸ் ஏழாம் அறிவு என்பது உப காரணம்.

தொட்டிலில் இருந்த இலக்கியாவைத் தூக்கி வந்து ஏரோ ப்ளேனில் இருத்தியாச்சு. அடடே இது நம்ம வாகனம் ஆச்சே என்று குதூகலித்து எக்காளமிட்டார்.
வழக்கம் போல ஸ்டியரிங்கை இழுத்து, வளையத்தை ஒடித்து, அதன் மேற்பரப்பில் இருந்த உருண்டைகளை முறுக்கி ஒலியெழுப்பி விட்டு எம்பிப் பார்த்தார். திரும்பவும் அதன் இருக்கையில் அமர்ந்து விட்டுச் சிரித்தார். 
கைகளைச் சிறகுகளைப் போல அகல விரித்துத் தூக்குமாறு சைகை காட்டினார்.
XXXX விமான சேவை அவசரமாகத் தரையிறங்கியது. அவ்வ்வ் இதுவும் பத்து நிமிட பந்தம் ஆகிப் போச்சா.
பத்து நிமிடன் ஓடிய களைப்பில் இலக்கியா தோளில் சாய்ந்தார்.

நாளைக்கே நான் விஜய் மல்லய்யா மாதிரி பெரியளாளா வந்து ஏரோ ப்ளேன் வாங்குறேன்னு வச்சுப்போம் அப்ப என்ன செய்வோம் இலக்கியா 😀

Friday, July 3, 2015

இலக்கியாவும் நிறைந்த பத்து மாதங்களும்

Edit Posted by with No comments

வழக்கமாக ஒவ்வொரு மாதத்திலும் இலக்கியாவின் படி நிலை வளர்ச்சியைப் பற்றி எழுதி வந்தேன். ஆனால் கடந்த ஒன்பதாவது மாதத்தில் எழுத முன்வராமைக்கு முக்கிய காரணம் இலக்கியாவின் உடல் நிலை. 

சிட்னியில் ஜூன் மாதம் ஆரம்பித்தாலே அதை ஜுரம் மாதம் தொடங்கிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இருமல், தடுமல் (ஜலதோஷம்), ஃப்ளூ காய்ச்சல் என்று எல்லா வியாதிகளும் எங்கள் உடம்பை வேடந்தாங்கல் ஆக்கி விடும். முன் கூட்டியே ஃளூ எதிர்ப்பு தடுப்பூசியை இட்டுக் கொள்ளுமாறு ஆஸி அரசாங்கம் கெஞ்சிக் கதறிக் கேட்குமளவுக்கு நிலமை மோசமாக இருக்கும். 

இலக்கியாவும் தனது ஒன்பதாவது மாதத்தில் இந்த நோய்களுக்கு ஆட்பட்டார். பெரியவர்களுக்கு வந்தாலே மிக மிகக் கஷ்டப்படுவோம். பாவம் குழந்தை முதலில் இந்த நோய் பீடிக்கப்பட்ட போது மிகவும் கஷ்டப்பட்டார். பெரியவர்கள் போல கர்ண கொடூரமாக இருமுவார், தொண்டையில் நோவு இருக்கும் போல இருமின வாக்கில் அழுவார். மூக்கால் ஒழுகிக் கொண்டே இருக்கும். காய்ச்சல் வேறு அனல் படுக்கை போட்டிருக்கும். சாப்பிட விருப்பம் இருந்தாலும் வாய்க்குள்ளால் அதை விழுங்கவோ குடிக்கவோ கஷ்டப்பட்டு மறுதலித்தார். எமது வீட்டுக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய குழந்தை நல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வோம். சில சமயம் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். மொத்தம் ஏழு மணித்தியாலங்களைக் கடக்கும் ஒவ்வொரு மருத்துவமனை விஜயமும்.
வைத்தியரிடம் போனால் அவருக்குச் சிரித்து விளையாட்டுக் காட்டுவார் இலக்கியா.
ஒரு தேக்கரண்டியால் திராவகத்தை சிறுகச் சிறுகக் கொடுமாறு வைத்தியர் ஆலோசனை சொன்னார். ஆனால் தனது வழக்கமான உணவுப் பயிற்சியிலிருந்து மாறுபட்ட  விநோதமான செய்கையாக இருப்பதால் இலக்கியா ஒத்துழையாமை செய்வார். ஒரே சமயத்தில் இலக்கியாவின் அம்மாவுக்கும் இதே நோய்கள் தீவிரமாக வந்து இன்னொரு பக்கம் அவரும் போராடிக் கொண்டே தன் மகளைச் சீராட்ட வேண்டிய நிர்ப்பந்தம். நான் ஃப்ளூ  தடுப்பூசி எடுத்திருந்தாலும் அதையும் தாண்டிப் புனிதமானது என்று இந்தத் தடுமல், இருமல், காய்ச்சல் கூட்டணி அமைத்து ஒரு வழி பண்ண ஆரம்பித்தன.
வீட்டில் மூன்று உறுப்பினர்களுமே மருந்துப் பொதிகளோடு சீவியம். கடந்த ஆறு வாரங்களாக இந்த நோய்க் கூற்றின் தீவிரத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபடுகிறார் இலக்கியா. இப்போதைக்கு ஆங்காங்கே இருமல் மட்டும். தேவையில்லாமல் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று நினைப்பாரோ என்னமோ வீணாகத் தன் கண்ணீரை விரயம் செய்யாத இலக்கியா தனக்கு வந்த நோயால் கஷ்டப்பட்ட அந்த நாட்கள் மிகவும் கடினமானவை. படுக்கையில் குப்பிறப் புரண்டு துடிப்பார் பாவம்.

பிள்ளையை வயிற்றில் சுமக்கும் போது கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன் என்று இலக்கியா அம்மா சொல்வார் தன் பிள்ளை உணவு மறுப்புச் செய்யும் போதும், இருமிக் கொண்டு கஷ்டப்படுபதையும் பார்த்து. உண்மையில் தாய்மை என்பது எவ்வளவு தூரம் கடவுளோடு ஒப்பு நோக்கக் கூடியது என்பதை இந்த மாதிரி அனுபவங்கள் வரும் போது தான் நேரடி விளக்கம் கொடுக்கிறது. இலக்கியா வளர்ந்த பிறகு அவரின் அம்மா செய்த ஒவ்வொரு காரியத்தையும் சொல்லி இன்னும் இன்னும் அவரின் தாயின் மேல் பிரியம் கொள்ள வைக்க வேண்டும்.
தாம்பத்தியத்தின் ஆதாரமாக வெளிப்படும் குழந்தை தான் அந்தத் திருமண பந்தத்தை இன்னும் நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

தனது ஒன்பதாவது மாதத்தில் இருந்து தான் "அப்பா" என்ற ஆளுமையோடு தன் பாசத்தைப் பங்கிட வேண்டும் என்று இலக்கியாவுக்குத் தெரிந்திருக்கிறது :) நான் அலுவலகம் முடித்து வீட்டின் மேல்மாடிப் படிக்கட்டுகளில் ஏறும் போதே துள்ளிக் குதிப்பதாக இலக்கியா அம்ம சொல்வார். என்னுடைய நாய், பூனைச் சேஷ்டைகள் என்றால் வஞ்சகமில்லாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.
என்னுடைய அப்பாவின் பழக்கங்களில் ஒன்று  குழந்தையைத் தூக்கி "முட்டு முட்டு முட்டு" என்றால் குழந்தை அவரின் நெற்றியில் தன் நெற்றியால் இடிக்கும். 
இலக்கியாவுக்கு இதை நான் பழக்கி விட்டேன். "முட்டுங்கோ முட்டுங்கோ" என்று நான் ஆண் பாவம் படத்தில் கார்க்கார் சொல்வதைப் போலச் சொல்ல தன் தலையைப் பாதுகாப்பாகச் சரித்துக் கொண்டே வந்து இடிப்பார் :-)

இலக்கியாவுக்குப் பாட்டுக் கேட்பதென்றால் கொள்ளை ஆசை. அதுவே சிரித்துக் கொண்டே தன் கால்களை உதைத்து ஆடும் நிலைக்குக் கொண்டு போகும் நிலைக்கு மாறும். இரு வாரங்களுக்கு முன்னர் நீண்ட பயணத்தில் மாதா கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பும் போது காரில் "போகாதே போகதே" என்று யுவன் பாடப் பின்னால் இருந்து அதே சந்தத்தில் இலக்கியாவும் ராகமிழுத்துப் பாட எங்களுக்குச் சிரிப்பு.
"அப்பாவின் பழக்கமெல்லாம் மகளுக்கும் வருகுது" என்று கருகும் வாசனை வந்தது
 :-)

இப்ப்போதெல்லாம் தானே சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கங்கணம் கட்டி, அவரை அமர்த்த முயற்சித்தால்  கால்களை நீட்டியபடி நிற்கப் பார்ப்பார்.

தனது ஒன்பதாவது மாதத்தில் தான் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் அப்பப்பா, அப்பம்மாவை ஸ்கைப் வழி பார்த்தார். இலக்கியாவைப் பார்த்து மறுமுனையில் மடிக்கணினியைத் தொட்டு முத்தமிட்டார் இலக்கியாவின் அப்பப்பா.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இலக்கியாவின் கீழ் வாய் முரசில் ஒரு வெள்ளைத் தீற்றல் அது மெல்ல மெல்ல சிறு மல்லிகை மொட்டுப் போல வளர, கூடவே கூட்டாளியாக இன்னொன்று.
இலக்கியா மனம் விட்டுச் சிரிக்கும் போது 
அவை உள்ளேயிருந்து வெள்ளைக் கொடி காட்டும். 
இலக்கியாவுக்கு பல்லுக் கொழுக்கட்டை அவிக்கும் நேரம் வந்துட்டுது :-)

"பிள்ளைக்குத் தோடு குத்துவமா" என்று இலக்கியாவின் அம்மா கேட்கும் போது இலக்கியாவின் காதை வருடியபடி "பாவம் இன்னும் வளரட்டும் பிஞ்சு மாதிரி இருக்குது" என்று ஒத்திப் போட்ட திட்டமும் கூடிய கெதியில் நிறைவேற்ற வேண்டும்.

மல்லிகை மொட்டுப் பல்லு

Edit Posted by with No comments
இலக்கியாவின் முரசில் வெள்ளைத் திட்டு ஒன்று மல்லிகை மொட்டாக வளருது பல்லு

Monday, June 22, 2015

சட்டத்தை மாற்றுங்கள்

Edit Posted by with No comments
இலக்கியா தொட்டிலை விட்டுப் பாய எத்தனிப்பதால் தொட்டில் சட்டத்தைக் கீழே இறக்கியாச்சு, தட் சட்டத்தை மாற்றுங்கள் மொமெண்ட் 😀

Monday, June 1, 2015

வைத்தியரிடம் விளையாடிச் சிரித்து மகிழும் இலக்கியா

Edit Posted by with No comments
உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு வரும் வைத்தியரும் இலக்கியா செய்யும் குறும்பால் சிரித்துவிடுவர் 😀 அப்பன் பேர் சொல்லும் பிள்ளை

கடுமையான வருத்தத்திலும் தன்னைப் பரிசோதிக்கும் வைத்தியரிடம் விளையாடிச் சிரித்து மகிழும் இலக்கியா இன்னொரு வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கிறார்

Tuesday, May 26, 2015

ஸ்கைப் வழி அப்பப்பா, அப்பம்மா வைத் தரிசித்தார்

Edit Posted by with No comments
இலக்கியா இன்று முதன்முதலாக ஸ்கைப் வழி யாழ்ப்பாணத்தில் இருக்கும் அப்பப்பா, அப்பம்மா வைத் தரிசித்தார்

Monday, May 25, 2015

இதோஓஓ வந்துட்ட்ட்டேன்ன்

Edit Posted by with No comments
இலக்கியா தூரத்தில் இருந்த சில்லுப்பூட்டிய விளையாட்டுப் பொருளைக் கண்டு இதோஓஓ வந்துட்ட்ட்டேன்ன் என்று எட்டித் தாவி விழுந்தெழும்பி அடிபட்டு

Saturday, May 23, 2015

இலக்கியா எழும்பி நடக்கப் பழகுறா

Edit Posted by with No comments
“தகத ததிமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா” பாடலில் தள்ளாடுற கமலகாசன் போல இலக்கியா எழும்பி நடக்கப் பழகுறா 😁😁

Thursday, May 14, 2015

இலக்கியா அப்பாவுக்கு முதலாவது பிறந்த நாள்

Edit Posted by with No comments


இலக்கியா எழுப்பிய குதூகலம் நிரம்பிய மழலைச் சத்தம் கேட்டுத்தான் இன்று காலை கண் விழித்தேன். வழக்கத்துக்கு மாறாக விடிகாலை ஐந்து மணிக்கே எழும்பித் தன் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கிறா. வழக்கமாக வேலைக்குப் போகும் என் பரபரப்பான நிமிடங்களின் சந்தடி கேட்டுத்தான் மெல்லக் கண் விழித்துச் சிரிப்பா இலக்கியா. இந்த எட்டு மாதத்தில் தன் தாயைத் தொடந்து மெல்ல மெல்லத் தன் தந்தையின் அரவணைப்பையும் பூரணமாகத் தெரியும் காலம் வந்திருக்கு.
எனக்குப் பக்கத்தில் இருத்திக் கொஞ்ச நேரம் குழந்தையோடு விளையாடி விட்டு அலுவலகத்துக்கு அரக்கப் பரக்க ஓடி வந்து விட்டேன்.

பிறந்த நாள் என்பது எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து குழந்தை போல உற்சாகம் தொற்றிக் கொள்ளும் நாள். புதுச் சட்டை போட வேண்டும், கோயிலுக்குப் போக வேண்டும் என்று இந்த விஷயயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பிறந்த நாள், பண்டிகை தினங்களில் விடுமுறை எடுத்து வீட்டாருடன் கொண்டாட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகப் பின்பற்றினாலும் இன்று தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேலைக்கு வந்து விட்டேன். மாலை தான் சிட்னி முருகனைச் சந்திக்க வேண்டும். 

காலை முதன் முதலில் கேட்க வேண்டும் என்று மனதில் ஒதுக்கி வைத்த இசைஞானி இளையராஜா பாடிய பாடலைக் கேட்டேன். அதுதான் இன்று கோரஸ் போட்டிப் பாடலாகவும் வருகின்றது :-) 
அவர் தானே நமக்கெல்லாம் இசைப்பால் ஊட்டிய தாய்.

நான் வீடு செல்லும் நேரம் கணித்து ஊரிலிருந்து அம்மா அழைப்பார், கூடவே அப்பாவும். 
"பருவத்தே பயிர் செய்" என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். நாம் நம் பெற்றோருக்குச் செய்ய வேண்டியது அவர்கள் வாழும் காலத்தில் இயன்றளவு அவர்களின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு கணக்காக முடித்த எனக்கு நீண்டகாலக் கணக்காக இருந்த கணக்கை நிறைவேற்றிய பெரும் திருப்தி. 
இந்தப் பிறந்தநாளில் என் பெற்றோருக்கான அடுத்த தலைமுறையை இலக்கியா உருவில் காட்டியது தான் அவர்களுக்கு நான் கொடுத்த பெரும் பரிசு.

நீங்கள் எல்லோரும் அன்போடு வாழ்த்தியமைக்குத் தனித்தனியாக வாழ்த்த முடியவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருப்பதை நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.