Thursday, May 14, 2015

இலக்கியா அப்பாவுக்கு முதலாவது பிறந்த நாள்

Edit Posted by with No comments


இலக்கியா எழுப்பிய குதூகலம் நிரம்பிய மழலைச் சத்தம் கேட்டுத்தான் இன்று காலை கண் விழித்தேன். வழக்கத்துக்கு மாறாக விடிகாலை ஐந்து மணிக்கே எழும்பித் தன் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கிறா. வழக்கமாக வேலைக்குப் போகும் என் பரபரப்பான நிமிடங்களின் சந்தடி கேட்டுத்தான் மெல்லக் கண் விழித்துச் சிரிப்பா இலக்கியா. இந்த எட்டு மாதத்தில் தன் தாயைத் தொடந்து மெல்ல மெல்லத் தன் தந்தையின் அரவணைப்பையும் பூரணமாகத் தெரியும் காலம் வந்திருக்கு.
எனக்குப் பக்கத்தில் இருத்திக் கொஞ்ச நேரம் குழந்தையோடு விளையாடி விட்டு அலுவலகத்துக்கு அரக்கப் பரக்க ஓடி வந்து விட்டேன்.

பிறந்த நாள் என்பது எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து குழந்தை போல உற்சாகம் தொற்றிக் கொள்ளும் நாள். புதுச் சட்டை போட வேண்டும், கோயிலுக்குப் போக வேண்டும் என்று இந்த விஷயயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பிறந்த நாள், பண்டிகை தினங்களில் விடுமுறை எடுத்து வீட்டாருடன் கொண்டாட வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகப் பின்பற்றினாலும் இன்று தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேலைக்கு வந்து விட்டேன். மாலை தான் சிட்னி முருகனைச் சந்திக்க வேண்டும். 

காலை முதன் முதலில் கேட்க வேண்டும் என்று மனதில் ஒதுக்கி வைத்த இசைஞானி இளையராஜா பாடிய பாடலைக் கேட்டேன். அதுதான் இன்று கோரஸ் போட்டிப் பாடலாகவும் வருகின்றது :-) 
அவர் தானே நமக்கெல்லாம் இசைப்பால் ஊட்டிய தாய்.

நான் வீடு செல்லும் நேரம் கணித்து ஊரிலிருந்து அம்மா அழைப்பார், கூடவே அப்பாவும். 
"பருவத்தே பயிர் செய்" என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். நாம் நம் பெற்றோருக்குச் செய்ய வேண்டியது அவர்கள் வாழும் காலத்தில் இயன்றளவு அவர்களின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு கணக்காக முடித்த எனக்கு நீண்டகாலக் கணக்காக இருந்த கணக்கை நிறைவேற்றிய பெரும் திருப்தி. 
இந்தப் பிறந்தநாளில் என் பெற்றோருக்கான அடுத்த தலைமுறையை இலக்கியா உருவில் காட்டியது தான் அவர்களுக்கு நான் கொடுத்த பெரும் பரிசு.

நீங்கள் எல்லோரும் அன்போடு வாழ்த்தியமைக்குத் தனித்தனியாக வாழ்த்த முடியவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருப்பதை நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

0 comments:

Post a Comment