வழக்கமாக ஒவ்வொரு மாதத்திலும் இலக்கியாவின் படி நிலை வளர்ச்சியைப் பற்றி எழுதி வந்தேன். ஆனால் கடந்த ஒன்பதாவது மாதத்தில் எழுத முன்வராமைக்கு முக்கிய காரணம் இலக்கியாவின் உடல் நிலை.
சிட்னியில் ஜூன் மாதம் ஆரம்பித்தாலே அதை ஜுரம் மாதம் தொடங்கிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இருமல், தடுமல் (ஜலதோஷம்), ஃப்ளூ காய்ச்சல் என்று எல்லா வியாதிகளும் எங்கள் உடம்பை வேடந்தாங்கல் ஆக்கி விடும். முன் கூட்டியே ஃளூ எதிர்ப்பு தடுப்பூசியை இட்டுக் கொள்ளுமாறு ஆஸி அரசாங்கம் கெஞ்சிக் கதறிக் கேட்குமளவுக்கு நிலமை மோசமாக இருக்கும்.
இலக்கியாவும் தனது ஒன்பதாவது மாதத்தில் இந்த நோய்களுக்கு ஆட்பட்டார். பெரியவர்களுக்கு வந்தாலே மிக மிகக் கஷ்டப்படுவோம். பாவம் குழந்தை முதலில் இந்த நோய் பீடிக்கப்பட்ட போது மிகவும் கஷ்டப்பட்டார். பெரியவர்கள் போல கர்ண கொடூரமாக இருமுவார், தொண்டையில் நோவு இருக்கும் போல இருமின வாக்கில் அழுவார். மூக்கால் ஒழுகிக் கொண்டே இருக்கும். காய்ச்சல் வேறு அனல் படுக்கை போட்டிருக்கும். சாப்பிட விருப்பம் இருந்தாலும் வாய்க்குள்ளால் அதை விழுங்கவோ குடிக்கவோ கஷ்டப்பட்டு மறுதலித்தார். எமது வீட்டுக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய குழந்தை நல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வோம். சில சமயம் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். மொத்தம் ஏழு மணித்தியாலங்களைக் கடக்கும் ஒவ்வொரு மருத்துவமனை விஜயமும்.
வைத்தியரிடம் போனால் அவருக்குச் சிரித்து விளையாட்டுக் காட்டுவார் இலக்கியா.
ஒரு தேக்கரண்டியால் திராவகத்தை சிறுகச் சிறுகக் கொடுமாறு வைத்தியர் ஆலோசனை சொன்னார். ஆனால் தனது வழக்கமான உணவுப் பயிற்சியிலிருந்து மாறுபட்ட விநோதமான செய்கையாக இருப்பதால் இலக்கியா ஒத்துழையாமை செய்வார். ஒரே சமயத்தில் இலக்கியாவின் அம்மாவுக்கும் இதே நோய்கள் தீவிரமாக வந்து இன்னொரு பக்கம் அவரும் போராடிக் கொண்டே தன் மகளைச் சீராட்ட வேண்டிய நிர்ப்பந்தம். நான் ஃப்ளூ தடுப்பூசி எடுத்திருந்தாலும் அதையும் தாண்டிப் புனிதமானது என்று இந்தத் தடுமல், இருமல், காய்ச்சல் கூட்டணி அமைத்து ஒரு வழி பண்ண ஆரம்பித்தன.
வீட்டில் மூன்று உறுப்பினர்களுமே மருந்துப் பொதிகளோடு சீவியம். கடந்த ஆறு வாரங்களாக இந்த நோய்க் கூற்றின் தீவிரத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபடுகிறார் இலக்கியா. இப்போதைக்கு ஆங்காங்கே இருமல் மட்டும். தேவையில்லாமல் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று நினைப்பாரோ என்னமோ வீணாகத் தன் கண்ணீரை விரயம் செய்யாத இலக்கியா தனக்கு வந்த நோயால் கஷ்டப்பட்ட அந்த நாட்கள் மிகவும் கடினமானவை. படுக்கையில் குப்பிறப் புரண்டு துடிப்பார் பாவம்.
பிள்ளையை வயிற்றில் சுமக்கும் போது கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன் என்று இலக்கியா அம்மா சொல்வார் தன் பிள்ளை உணவு மறுப்புச் செய்யும் போதும், இருமிக் கொண்டு கஷ்டப்படுபதையும் பார்த்து. உண்மையில் தாய்மை என்பது எவ்வளவு தூரம் கடவுளோடு ஒப்பு நோக்கக் கூடியது என்பதை இந்த மாதிரி அனுபவங்கள் வரும் போது தான் நேரடி விளக்கம் கொடுக்கிறது. இலக்கியா வளர்ந்த பிறகு அவரின் அம்மா செய்த ஒவ்வொரு காரியத்தையும் சொல்லி இன்னும் இன்னும் அவரின் தாயின் மேல் பிரியம் கொள்ள வைக்க வேண்டும்.
தாம்பத்தியத்தின் ஆதாரமாக வெளிப்படும் குழந்தை தான் அந்தத் திருமண பந்தத்தை இன்னும் நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது.
தனது ஒன்பதாவது மாதத்தில் இருந்து தான் "அப்பா" என்ற ஆளுமையோடு தன் பாசத்தைப் பங்கிட வேண்டும் என்று இலக்கியாவுக்குத் தெரிந்திருக்கிறது :) நான் அலுவலகம் முடித்து வீட்டின் மேல்மாடிப் படிக்கட்டுகளில் ஏறும் போதே துள்ளிக் குதிப்பதாக இலக்கியா அம்ம சொல்வார். என்னுடைய நாய், பூனைச் சேஷ்டைகள் என்றால் வஞ்சகமில்லாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.
என்னுடைய அப்பாவின் பழக்கங்களில் ஒன்று குழந்தையைத் தூக்கி "முட்டு முட்டு முட்டு" என்றால் குழந்தை அவரின் நெற்றியில் தன் நெற்றியால் இடிக்கும்.
இலக்கியாவுக்கு இதை நான் பழக்கி விட்டேன். "முட்டுங்கோ முட்டுங்கோ" என்று நான் ஆண் பாவம் படத்தில் கார்க்கார் சொல்வதைப் போலச் சொல்ல தன் தலையைப் பாதுகாப்பாகச் சரித்துக் கொண்டே வந்து இடிப்பார் :-)
இலக்கியாவுக்குப் பாட்டுக் கேட்பதென்றால் கொள்ளை ஆசை. அதுவே சிரித்துக் கொண்டே தன் கால்களை உதைத்து ஆடும் நிலைக்குக் கொண்டு போகும் நிலைக்கு மாறும். இரு வாரங்களுக்கு முன்னர் நீண்ட பயணத்தில் மாதா கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பும் போது காரில் "போகாதே போகதே" என்று யுவன் பாடப் பின்னால் இருந்து அதே சந்தத்தில் இலக்கியாவும் ராகமிழுத்துப் பாட எங்களுக்குச் சிரிப்பு.
"அப்பாவின் பழக்கமெல்லாம் மகளுக்கும் வருகுது" என்று கருகும் வாசனை வந்தது
:-)
இப்ப்போதெல்லாம் தானே சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கங்கணம் கட்டி, அவரை அமர்த்த முயற்சித்தால் கால்களை நீட்டியபடி நிற்கப் பார்ப்பார்.
தனது ஒன்பதாவது மாதத்தில் தான் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் அப்பப்பா, அப்பம்மாவை ஸ்கைப் வழி பார்த்தார். இலக்கியாவைப் பார்த்து மறுமுனையில் மடிக்கணினியைத் தொட்டு முத்தமிட்டார் இலக்கியாவின் அப்பப்பா.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இலக்கியாவின் கீழ் வாய் முரசில் ஒரு வெள்ளைத் தீற்றல் அது மெல்ல மெல்ல சிறு மல்லிகை மொட்டுப் போல வளர, கூடவே கூட்டாளியாக இன்னொன்று.
இலக்கியா மனம் விட்டுச் சிரிக்கும் போது
அவை உள்ளேயிருந்து வெள்ளைக் கொடி காட்டும்.
இலக்கியாவுக்கு பல்லுக் கொழுக்கட்டை அவிக்கும் நேரம் வந்துட்டுது :-)
"பிள்ளைக்குத் தோடு குத்துவமா" என்று இலக்கியாவின் அம்மா கேட்கும் போது இலக்கியாவின் காதை வருடியபடி "பாவம் இன்னும் வளரட்டும் பிஞ்சு மாதிரி இருக்குது" என்று ஒத்திப் போட்ட திட்டமும் கூடிய கெதியில் நிறைவேற்ற வேண்டும்.
0 comments:
Post a Comment