Friday, October 3, 2014

இலக்கியா அப்பா ஆகிய நான்

Edit Posted by with 6 comments

இன்றிலிருந்து சரியாக முப்பத்தோரு தினங்கள் முன்பதாக, செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை எனது வழமையான நாளாக அமையவில்லை. அதீத போராட்டத்தின் பின்னர் ஒரு உன்னதத்தைக் கொடுத்த நாளாக அமைந்திருந்தது.

நிறை மாதக் கர்ப்பிணியான என் மனைவிக்கு செப்டெம்பர் 3 க்கு முந்திய நாட்களில் இலேசாக வலி எடுத்திருந்தது. பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே மகப்பேற்றுக்காகப் பதிவு செய்து வைத்திருந்ததால் எமது மகப்பேற்று வைத்தியரின் ஆலோசனைப்படி மனைவியை அங்கே அழைத்துச் சென்றேன். மனைவியைப் பரிசோதித்து விட்டு இது வெறும் பிரவசகால வலி என்றும் நிறைய ஓய்வெடுக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஆனால் என் மனைவிக்கோ உள்ளூரப் பயம் கவ்வியிருந்ததை என்னால் உணர முடிந்தது.  எனக்கும் அதே நிலைதான் ஆனால் நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரைச் சமாதானப்படுத்தியும், தொலைக்காட்சியில் குழந்தைகள் பாடுவதையும் போட்டுப் பராக்குக் காட்டினேன். எங்கள் பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. 2012 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த அந்த மோசமான ஆகஸ்ட் 14 ஆம் நாள் அடிக்கடி வந்து நினைப்பூட்டியது. அந்த நாளை நினைக்கும் போதெல்லாம் தற்கொலைப் பாறையின் விளிம்பில் நிற்குமாற் போல இருக்கும். அந்த நாளுக்குப் பின்னர் ஒரு வைத்தியர் எங்கள் முகத்தில் அடித்தால் இனிமேல் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று சொல்லிவிட்டார்.

அதன் பின்னர் ஒரு திடீரென்று முடிவெடுத்து நவம்பர் 2012 இந்தியாவுக்குச் சென்று குருவாயூரப்பனையும், கதிர்க்காமக் கந்தனையும் வேண்டி முறையிட்டேன். அந்த விஜயத்தின் போது எழுத்தாளர் பாரா சார் ஐ அப்போது சந்தித்தபோது, "கானா எதுக்கும் கவலைப்படாதே உனக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், எங்களுக்கு அருள் கொடுத்த திருக்கருக்காவூர் அம்மன் கோயில் இருக்கு நான் உனக்காக வேண்டுதல் வைக்கிறேன் நீ அப்புறமா வந்து வேண்டுதலை நிறைவேற்று" என்றார்.
சந்தோஷமான இந்த நாளில் பழைய நினைவுகளை மீண்டும் நினைப்பூட்டாமல் கடக்கிறேன்.

இம்முறை என் மனைவி கருவுற்ற நாள் முதல் ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு நெருப்பாற்றைக் கடப்பது போல இருக்கும்.இந்த ஆண்டு தை பிறந்ததும் சிட்னி முருகனிடமும், மல்கோவா மரியன்னையுடமும் என் வேண்டுதலை முறையிட்டேன்.

செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை, வேலைக்குக் கிளம்ப என்னைத் தயார்படுத்தும் போது, கடுமையான இடுப்பு வலி ஏற்படுகின்றது என் மனைவிக்கு. பிரசவ காலத்தில் இடுப்பு வலி என்பது மோசமான பின் விளைவுக்கு அறிகுறி என்ற மருத்துவரின் எச்சரிக்கை நினைவுக்கு வந்து, உடனேயே மருத்துவமனைக்குப் பயணிக்கிறோம். மனைவியை அங்கிருக்கும் மகப்பேற்றுப் பகுதியில் கையளித்துவிட்டுக் காத்திருப்போம் என்று நினைத்த போது " நீங்கள் வேலைக்குச் செல்லுங்கள் அவசரம் என்றால் செல்போனில் அழைக்கிறேன்" என்றார் மனைவி. மருத்துவமனை நிர்வாகம் மிகவும் பொறுப்போடு கண்காணிக்கும் என்ற நிம்மதியில் நானும் வேலைக்குக் கிளம்பினேன். அன்று முக்கியமான ஒரு அலுவலகச் சந்திப்பு இருந்ததும் ஒரு காரணம். வேலைக்குச் செல்லும் போதே மனைவியின் ஊரைச் சேர்ந்த அக்கா ஒருவரின் அழைப்பு எனக்கு வருகிறது.
"நான் போய்ப் பார்க்கிறேன் அவரை" என்று அந்த அக்கா சொன்னது எனக்கு சிட்னி முருகனே ஆள் அனுப்பி உதவியது போலிருந்தது.

வேலைக்குப் போய் அரை மணி நேரத்தில் மனைவியின் உறவுக்கார அக்காவிடமிருந்து அழைப்பு, "உடனேயே அவருக்கு ஒப்பிரேஷன் செய்யவேணுமாம்" என்று அவர் சொன்னபோது என் தலையில் ஒரு இடி இறங்கியது. அலுவலகத்தில் இருந்து ரயிலில் பயணித்துப் போனால் ஒரு மணி நேரமெடுக்கும். டாக்ஸி பிடித்தால் குறைந்தது 40 நிமிடம் எடுக்கும் தொலைவில் மருத்துவமனை. எனக்கு அந்த நேரம் எதுவும் ஓடாமல் ரயில் நிலையத்தை நோக்கி ஓடுகிறேன். எதையும் தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடத் திராணியற்ற நிலை அது. பிறகு அந்தத் திசையில் இருந்து டாக்ஸி நிறுத்துமிடத்துக்கு ஓடுகிறேன். எதிர்ப்பட்ட டாக்ஸிக்காரரிடம் மருத்துவமனை பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்கிறேன். ஆனால் அவருக்கு என் அவசரத்தைக் காண்பிக்கவில்லை, இவர் வேகமாக ஓடி வழியில் ஏதும் அசம்பாவிதம் வந்துவிடும் என்ற பயமே காரணம்.
ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு இருப்புக் கொள்ளாது கால்கள் உதைத்துத் தள்ளுகின்றன. எப்படியாவது மனைவிக்கு நடக்க இருக்கும் சத்திர சிகிச்சைக்குக் குறித்த நேரத்துக்குப் போய்விட வேண்டுமே ஆண்டவா.
அந்த டாக்ஸிக்காரர் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் தன் டாக்ஸியை விட்டு 20 நிமிடத்துக்குள் மருத்துவமனை வளாகத்தில் என்னை இறக்குகிறார்.

அங்கிருந்து மேல் மாடி காண ஓடி மகப்பேற்றுப் பிரிவுக்குள் நுழைந்தேன். எதிர்ப்பட்ட சீன இனத்துத் தாதிக்கு என்னை நன்றாகத் தெரியும். முந்திய அனர்த்தத்தின் போதும் அவர்தான் என் மனைவியைப் பராமரித்தார். இன்னும் இரு நிமிடம் தான் இருக்கு சத்திர சிகிச்சை நடக்கப்போகிறது உடனேயே மருத்துவமனை உடையை மாற்றச் சொல்லி அனுப்புகிறார். கால் ஒரு பக்கம் கை ஒரு பக்கம் என்று இழுபட்டு அவசரத்தில் குழம்பி ஒருவாறாக என் உடையை அவசரமாக மாற்றினேன். மூச்சிரைத்து நெஞ்சில் இலேசாக முட்டியது. சத்திர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே வந்த இன்னொரு ஆண் தாதி என் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்தச் சொல்கிறார். சத்திர சிகிச்சைப் பிரிவுக்குள் போகிறேன். என் மனைவிக்கு நோவு ஏற்படாத ஊசி போட்டு அரை மயக்கத்தில் இருக்கிறார்.

என் மனைவியின் இடுப்பு வரை திரை மறைத்து மறு கரையில் இருந்த வைத்தியர் குழாமும் தாதிமாரும் வேகவேகமாக இயங்கியவாறு தம் பணியில் முனைப்பாக இருக்கிறார்கள். ஏதோ எனக்காகக் காத்திருந்தது போல, நான் அங்கு நுழைந்திருந்த சில நொடிக்கெல்லாம் அறுவை சிகிச்சை நடந்து தூக்கிப் பிடிக்கிறார்கள் அசைந்தாடும் உயிருள்ள ஒரு தங்கப் பேழையை. வெளியே வந்த வாக்கிலேயே வீறிட்டு அழுகிறது அது.

எங்களூர் கந்தசுவாமியார் தீர்த்தத் திருவிழாவில் தாமரைக் குளத்தில் இருந்து முக்கி எழும் போது வெண்பூச்சும் சிவப்புப் பூக்களும் ஒட்டிய உடலோடு இருக்குமாற் போல அந்தக் காட்சி.

அந்தக் குழந்தையை அப்படியே தூக்கி ஒரு மேசையில் கிடத்தினார்கள்.
எனக்கு அந்த நேரம் எதுவுமே பேசமுடியாதவாறு வாய் இறுக்கியது.  கைகளைக் கூப்பி அந்த ஆண் தாதியைப் பார்த்தவாறே அழுகிறேன்.
"நன்றாக அழுங்கள் இந்த இனிமையான நேரத்தில் உணர்ச்சியை வெளிக்காட்ட இதுவே நல்லது"
என்றவாறே அந்த ஆண் தாதி என் குழந்தையின் தொப்புளோடு நீண்டிருந்த தாமரைக் கொடி போன்ற அந்தக் கொடியை வெட்டச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லியவாறே அழுதுகொண்டே இருந்தேன்.
குழந்தையை ஏந்திப் பிடித்துப் படுத்திருந்த என் மனைவி அருகில் வந்து காட்டி "இது உங்கள் குழந்தை" என்ற போது பாதி மயக்கத்திலும் விசும்பினார்.
அங்கிருந்து கடந்து என் மனைவியின் உறவுக்கார அக்காவைக் கண்டபோதும் மீண்டும் அதே நிலையில் கைகூப்பித் தொழுதே .

குழந்தை பிறக்க வேண்டிய தினத்தில் இருந்து முன்கூட்டியே பிறந்த காரணத்தால் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருக்கவேண்டும் ஆனால் பயப்பட ஏதுமில்லை என்றார்கள். சரவணப் பொய்கையில் உதித்த முருகனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தது போல இருந்தது அந்த மூன்று வாரங்களும் தாதியர் பராமரிப்பில் இருந்த என் குழந்தையைப் பார்க்கும் போது.  அந்த அனுபவங்களைக் கோர்த்து ஒரு தொடர் எழுத இருக்கிறேன். என்னைப் போலவே இம்மாதிரியான சவாலைச் சந்திக்கும் பெற்றோருக்கு அது உதவும் என்ற நோக்கில். பின்னர் தான் அறிந்து கொண்டேன் நான் சந்தித்த அந்தச் சீனத்தாதியே வற்புறுத்தி சத்திர சிகிச்சை செய்யுமாறு எங்கள் மகப்பேற்று வைத்தியரைத் தூண்டியதாகவும் அதன் பின்னரேயே எங்கள் குழந்தை காப்பாற்றப்பட்டது என்றும் அறிந்து கொண்டேன். ஆண்டவன் எல்லா ரூபத்திலும் வருவான்.

தந்தையர் தினத்துக்கு முந்திய நாள் வரை நாட்கணக்கில் எம் குழந்தைக்கு முருகனோடு சம்பந்தப்பட்ட பெயர் வைக்க வேண்டும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த போது சடுதியாக வந்துதித்தது,
"இலக்கியா"
என்ற பெயர். முருகன் தமிழ்க்கடவுள், இந்தப் பெயரும் தமிழோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற பெரும் திருப்தியோடுன் இருந்த எனக்கு, இந்தப் பெயர்  குறித்த மேலதிக விளக்கங்களை இணையத்தில் தேடிய போது "இலக்கியா" என்ற பெயர் கார்த்திகை நட்சத்திரம் சார்ந்தது என்று  தெரிந்த போது இன்ப அதிர்ச்சி.

இலக்கியாவை வெள்ளைக்காரன் எப்படிக் கூப்பிடுவான் என்று நம்மவர் சிலர் கேட்டபோது, ரஷ்யாக்காரனை எப்படிக் கூப்பிடுவானோ அதை விட இலகுவாக என்றேன் நான். என் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என்ற உறுதியில் இருந்து நான் விலகவில்லை.  நான் மதிக்கும் தமிழ்ப்புலவர் ஒருவர் "இலக்கியா" என்று என் பிள்ளைக்குப் பெயர் வைத்ததைக் கேட்டுத் தானாகவே என்னை அழைத்து "அதானே பார்த்தேன் தமிழ்ப்பெயர் வைக்காவிட்டால் உம்மை நான் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பேன்" என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.
தந்தையர் தினத்தில் மல்கோவா மரியன்னையிடம் சென்று பிரார்த்தித்து விட்டு, துண்டுச்சீட்டில் "இலக்கியா" என்ற பெயரை உத்தியோகபூர்வமாக எழுதி அறிவிக்கிறேன் மாதாவிடம்.

என்னுடைய விரத நாட்களில் நான் பிறந்ததில் இருந்து இன்று வரை தொடர்ந்து அனுஷ்டிப்பது நவராத்திரி விரதமாகும். நவராத்திரி காலத்தில் சரஸ்வதி பூஜை நாளில் எங்கள் பிள்ளையை வீட்டுக்குப் போக அனுமதித்தார்கள். அன்று தான் "கை வீணையை ஏந்தும் கலைவாணியே" பாடலைப் பகிர்ந்து கொண்டேன் இணையத்தில்.

தாயிடம் பால் குடித்து விட்டு என் கை மாறும் குழந்தையை மடியில் வைத்து "பாட்டி வடை கதை" யில் இருந்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். உன்னிப்பாகக் கேட்பது போல முகத்தை வைத்துக் கொள்வாள்.
"அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை என் பொன்னம்மா பொன்னம்மா" என்று நான் இளையராஜா குரலெடுத்துப் பாடவும் விநோதமாக என்னைப் பார்த்துத் சிரிப்பாள். "இளையராஜா தாத்தா பாடின பாட்டம்மா" என்று சொல்வேன் சிரிப்போடு. இதெல்லாம் ஒரு மாதக் குழந்தைக்கு ரொம்பவே அதிகம் என்றாலும் இதெல்லாம் இத்தனை ஆண்டுகாலம் என் மனக்கேணியில்த தங்கியிருந்த ஆசையால் விளைவது.

இன்று விஜயதசமி நாளில், எங்கள் இலக்கியாக்குட்டி பிறந்து ஒரு மாதம் நிறைந்த நாள் சடங்கும் வந்தது எதிர்பாராத இன்னொரு இன்ப அதிர்ச்சி. இன்று காலை சிட்னியில் இருக்கும் எங்களூர் ஐயர் வந்து முறையான சடங்குகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்.  ஒவ்வொரு வாரமும் சிட்னி முருகன் கோயிலின் வெளி வீதியில்  படியேறாமல் நின்று பூஜையை மனக்கண்ணால் கண்டு தரிசிப்பேன். நான்கு வாரங்களின் பின் தீட்டுக் கழித்து இன்று தான் சிட்னி முருகன் கோயிலுக்குள் சென்று "இலக்கியா"வுக்கு அர்ச்சனை செய்தேன். அர்ச்சனை முடிந்து  "இலக்கியா" என்று குரலெழுப்பி என் அர்ச்சனைத் தட்டை அர்ச்சகர்  தந்தபோது ஏற்பட்ட ஆனந்தம் சொல்லிலடங்காது. சிட்னி முருகன் சிரித்துக் கொண்டிருப்பது போல என் மனசு பேசிக்கொண்டது.

என் குழந்தை எப்படியெல்லாம் வளர வேண்டும் என்று எனக்கு எந்தவொரு உயர்ந்த இலட்சியமும் இல்லை.
"பெரியாட்களிடம் மரியாதையோட பழக வேணும், மற்றவர் மனங்கோணாமல் இருக்க வேணும்"
என்ற எதிர்பார்ப்புடனேயே இலக்கியாவை வளர்க்கப் போகிறேன். அதுதான் என் தந்தை எனக்கு உபதேசித்த மந்திரமும் கூட.

6 comments:

  1. அருமையான அற்புதக்குழந்தை இலக்கியா. உங்கள் ஆதங்கம் எல்லாம் புரிகிறது. மருத்துவத்துக்கே சவாலாக பிறந்தவள். நீங்கள் இன்னும் பெருமைப்பட்டுகொள்ளலாம்.

    இலக்கியாவின் அன்பும் அட்டகாசமும் தொடரட்டும். ❤️😍🎊🎉👏

    ReplyDelete
  2. Wowww goose pimples 🥰🥰🥰excellent blog.. cherishing memories forever 🥰🥰🥰இலக்கியா🥰 beautiful journey for you

    ReplyDelete
  3. அருமை sir. மனதைத் தொடும் பதிவு

    ReplyDelete