ஆயிரம் தந்த இசைஞானியின் இசை பரவ இலக்கியாவுக்குப் பல்லுக் கொழுக்கட்டை 🍼
காலை ஐந்து மணி சிட்னி முருகன் சந்நிதியடைந்து திருவெம்பாவைப் பாடல்களோடு காலைப் பூசையுமாக உள்ளம் உருகித் தொழ திருவெம்பாவை நன்னாளின் பொழுது புலர்ந்தது.
கிறிஸ்துமஸ் இன்று ஏசு பாலனின் பிறப்பினைக் கொண்டாட சிட்னியின் புற நகர்ப் பகுதியில் இருக்கும் மல்கோவா மரியன்னை ஆலயத்தில் சங்கமம்.
இந்த இரண்டு பயணங்களையும் இணைக்கிறது இசைஞானியின் "தாரை தப்பட்டை"
இன்று இலக்கியாவுக்கு "பல்லுக் கொழுக்கட்டை" சடங்கு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தோம். திருவெம்பாவை, கிறிஸ்துமஸ் இவற்றோடு இந்த ஆயிரமாவது இசைப் படையலும் சேர்ந்து விசேஷமாக்கி விட்டது.
"பல்லுக் கொழுக்கட்டை" குழந்தைக்குப் பற்கள் வளர ஆரம்பிக்கும் போது அந்த வளர்ச்சியைக் கொண்டாட நாம் எடுக்கும் வீட்டுத் திருவிழா என்பது மரபு.
கொழுக்கட்டை இதழ்களில் பற்களைப் போல் வெள்ளைத் தேங்காய்ச் சொட்டுப் பதித்துத் தயாராகி விட்டது அழகழகான பல்லுக் கொழுக்கடைகள்.
இரண்டு ஆலயங்களுக்குப் போய் வந்து இறை ஆசியோடு இலக்கியாவை மேடையில் இருத்தி அவர் மேல் பல்லுக் கொழுக்கட்டைகளைக் கொட்டிக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
என் இசைத் தாய் இளையராஜா சுரந்த
1000 வது குழந்தை "தாரை தப்பட்டை.
ஒவ்வொரு பாடலாக காதுகளால் வழித்து எடுத்துப் பத்திரமாக உடலெங்கும் பரவவிடுகிறது அந்தப் பரவச நிலையில்
இறுதிச் சொட்டாக "Theme" ஆரம்பிக்கவும் மயிர்கால்கள் குத்திட்டு கண்களில் நீர் உடம்பெல்லாம் ஆவியாகி மேலெழுமாற் போன்றதொரு உணர்வு.
இது பொய்யல்ல மெய்யே.
பாருருவாய பிறப்பற வேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங்கமலம் மலர்போல்
ஆருருவாய என் ஆரமுதே
உன்அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக் கொண்டருளே.
0 comments:
Post a Comment