நான் வளர்கிறேனே அப்பா - இலக்கியா பிறந்து இன்றோடு மூன்று மாதம்.
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியா பிறந்து மூன்று வாரங்கள் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருந்த காலங்களைப் பற்றி எழுத வேண்டும். ஆனால் அதையெல்லாம் தண்டி எங்கள் வீட்டுக்கு அவர் வந்த நாள் முதல் அவரின் படி நிலை வளர்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கிறோம் நானும் இலக்கியா அம்மாவும்.
குழந்தையை நன்றாக இறுகத் துணியால் சுற்றிப் படுக்க வைத்தாலேயே நன்றாகத் தூங்குவார் என்று தாதிமார் சொல்லி வைத்தனர். ஆனால் இலக்கியாவுக்குத் தன்னைத் துணியால் சுற்றிக் கட்டுவது பிடிக்காது.
வில்லன் பாசறையில் கையிற்றால் பிணைக்கப்பட்ட கதாநாயகி உடம்பை அசைத்து அசைத்துக் கழற்றிச் சுழற்றி எறிவது போல இலக்கியாவிடம் மாட்டுப்பட்ட துணி
இலக்கியாவுக்குத் தலைமுடி அதிகம் சிலவேளை தன் கையால் முடியைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பிப்பார் முடியைப் பிடித்த கையை எடுக்கத் தெரியாதாம்
இலக்கியாவைத் தூக்கி மடியில் இருத்தி வைத்து அவரோடு கதைக்கும் போது ஓ ஓ ஓ என்று இடைக்கிடை குரல் கொடுத்து ஆமோதிக்கிறார்;-)
தலையை எல்லாப் பக்கமும் பூமிப் பந்து போலச் சுழற்றிச் சுழற்றி வேடிக்கை பார்க்கிறார். கதை சொன்னால் உன்னிப்பாகக் கேட்கிறார். என் வாரிசு ஆச்சே
இலக்கியாவின் அம்மாவுக்குத் தான் 24 மணி நேரமும் இலக்கியாவைப் பார்க்கும் பொறுப்பு. அதனால் இலக்கியா தன் தாய் மீது கொண்டிருக்கும் நேசத்தையும் (பொறாமை எட்டிப் பார்த்தாலும்) பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இலக்கியா வளர்ந்த பிறகு அவரின் அம்மா செய்த பணிவிடைகளை எல்லாம் சொல்லி வைக்க வேண்டும்.
இலக்கியா பிறந்து அந்த மூன்று வாரங்கள் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருந்த சமயம் ஒருமுறை குழந்தையை ஏந்திக் கையில் வைத்திருந்தேன். முதன் முதலில் தன் பொக்கை வாயை விரித்துச் சிரித்த கணம் ஆனந்தத்தில் கண்கள் உடைப்பெடுத்துப் பெருகிவிட்டது எனக்கு அப்போது.
குழந்தை சிரித்தால் நரி வெருட்டுறதாம் என்று ஒரு சிலரும், கடவுளோட கதைக்கிறது என்று இன்னும் சிலரும் சொன்னார்கள்.
ஆனால் இரண்டு மாதங்களிலேயே எங்கள் முகம் பார்த்துச் சிரிக்கப் பழகிவிட்டார். எந்த நேரமும் இலக்கியா தனது அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். சில சமயம் அது சிரிப்போடு இருக்கும்.
எங்கள் வீட்டின் சுவரில் ஒட்டியிருக்கும் கண்டிய நடனம் என்ற நீண்ட சுவர்ச்சித்திரத்தைக் காணும் போது இவருக்கு ஏனோ குஷி பிறந்து விடும். அதைப் பார்த்துப் பார்த்துச் சிரிப்பார்.
தாய் யசோதையின் கையில் இருக்கும் கண்ணன் படத்தைக் கண்டால் வாயால் ஏதோ சொல்ல எத்தனிப்பது போல அபிநயம் பிடித்துப் பின்னர் அந்தப் படத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்.
அத்தனை பெருந்துன்பங்களையும் துடைத்து எறிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் மென் சிரிப்பு.
0 comments:
Post a Comment