இலக்கியா என்ற காக்கைக் குஞ்சு
Edit Posted by கானா பிரபா with No commentsமெல்ல மெல்லத் தள்ளாடி எழுந்து, இருக்கவா நிக்கவா என்ற தோரணையில் தள்ளாட்டம் போட்டு எழுந்து நிற்பதையெல்லாம் கடந்து விட்டார் இலக்கியா. இப்போதெல்லாம் எழும்பும் போதே மகா விஷ்ணு கணக்காக இரண்டு கைகளிலும் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு எழும்பி நடக்கும் கலையைக் கற்றுத் தேர்ந்து விட்டார்.
அதாவது "தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" சிவகுமாரில் இருந்து இப்ப பில்லா "தல" நடை மாதிரி.
இலக்கியா நடக்கும் போது கையில் வைத்திருக்கும் பொருட்களில் சீப்பு, குழந்தைக்கான சருமப் பராமரிப்பு கிறீம், உடல் வெப்பநிலையை அளக்கும் வெப்பமானி போன்றவை அடங்கும்.
விளையாட்டுப் பொருட்கள் ம்ஹும்.
போன வார இறுதியில் குழந்தைகளுக்கான கடையில் வாங்கிய இசைப் பெட்டியில் புல்லாங்குழல், சலங்கை கட்டிய கஞ்சிரா ,Xylophone எல்லாம் இருந்தது. அவற்றைப் பிரித்துக் காட்டினேன். ஏதோ சந்திர மண்டலத்தில் காலடி வைத்தது போலப் புழுகம் கொண்டு எட்டி அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்.
இலக்கியாவின் அம்மா புல்லாங்குழலில் இருந்து ஒவ்வொரு வாத்தியமாக வாசித்துக் காட்டினார்.
Xylophone இன் குச்சியை எடுத்து வாயில் வைத்துச் சுவைத்துப் பார்த்தார். பின்னர் புல்லாங்குழலால் Xylophone ஐ சூப்பர் சூப்பராயனின் சண்டைக் காட்சி போல ஒரு கையால் வில்லனை அடிக்கும் தோரணையில் அடி கொடுத்தார்.
இப்போது நான் புல்லாங்குழலை வாங்கி வாசித்துக் காட்டினேன்.
ஆகா இப்ப பிடிச்ச்ச்ச்சுட்ட்ட்டேஏஏஏஏன் என்பது போலக் கொக்கட்டம் விட்டுச் சிஎஇத்து விட்டுப் புல்லாங்குழலை வாங்கி வித விதமாக ஊதினார். அவரின் வாயில் இருந்து வரும் காற்றை விட உடம்பின் குலுக்கல் கொஞ்சமென்ன ரொம்பவே அதிகம் :-)
ஆனால் கொஞ்ச நேரத்தில் தொழிலைக் கற்றுத் தேர்ந்து விட்டார்.
சலங்கை கட்டிய அந்தக் கஞ்சிராவைத் தன் தலையில் தொப்பி மாதிரி மாட்டி விட்டு, புல்லாங்குழலை வாயில் வைத்து ஊதிக் கொண்டே Xylophone ஐ ஒரு குச்சியால் அடித்துக் கொண்டிருந்தார். சிங்காரவேலன் "கககா கிகீகீ குகூகூ புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பாட்டு ஒண்ணு படிச்சேன்" கமல் மாதிரி இருந்தது.
நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் இலக்கியாவை எனது அறையில் நடக்க விட்டு விட்டு என்ன செய்கிறார் என்று ஓரமாக நின்று பார்த்தேன்.
அந்த அறையின் ஓரத்தில் இலக்கியாவின் கழுத்தளவு உயரமான ஒரு மேசை. அதில் ஒரு விரிப்பு, விரிப்பின் மேல் இலக்கியாவின் அம்மாவின் கலர் கலரான பிளாஸ்டிக் செயற்கைச் சங்கிலிகளும் அந்த மேசையின் மற்றைய அந்தத்தில் ஒரு சாவிக் கொத்தும் இருந்தது.
இலக்கியா நேராக அங்கே போனார். அந்தச் செயற்கை நகைகளில் தான் கண் வைத்திருக்கிறார் என்று நினைத்தேன். அதையும் தாண்டிப் புனிதமானது என்பது போல
அந்தச் சாவிக் கொத்தைத் தான் எடுக்க வந்திருக்கிறார்.
நின்ற இடத்திலேயே தன் கையை நீட்டி அந்தச் சாவிக் கொத்துக் கைக்கு வருகுதா என்று பார்த்தார். ம்ஹும்.
இன்னும் நீளமாகத் தன் கையை நீட்டிப் பார்த்தார் ம்ஹும் இப்பவும் எட்டுதில்லையே
பின்னர் உடம்பை எக்கி இன்னும் கொஞ்சம் கையை நீட்டி ம்ஹும் இதுக்கு மேல கை நீட்டினா நான் விழுந்துடுவேன் என்று பிள்ளை நினைத்திருப்பார்.
அரை விநாடி யோசனை தான். மெல்ல மெல்ல அந்த மேசையின் மேலிருந்த விரிப்பை முன்னே இழுத்தார். அந்த விரிப்பின் அடுத்த கரையில் இருந்த சாவிக் கொத்து இப்போது வெகு இலகுவாக இலக்கியாவின் கைக்குப் பக்கத்தில்.
ஆனால் அதற்குள் இன்னொரு விபரீதம். அவர் அந்த விரிப்பை இழுக்கும் போது அம்மாவின் சங்கிலி, வெப்பமானி இரண்டும் கீழே விழுந்து விட்டது.
இலக்கியாவின் அம்மா தான் ஒழுங்காக அடுக்கி வைத்ததில் ஒன்று நிதானம் தப்பினாலும்
ருத்ரமாதேவி ஆகி விடுவாரே.
கீழே குனிந்து ஒவ்வொன்றாக எடுத்து மேலே வைத்தார்.
பரவாயில்லையே அப்பா போல "அந்தப் பயம் இருக்கட்டும்" :-))
இப்போது எல்லாம் சரியாகி விட்டது. இனி அந்தச் சாவிக் கொத்தை எடுக்கலாம் என்று இலக்கியா தன் கையை நீட்டி அதை எடுத்து ம் பிறகென்ன வாயில் வைத்துச் சுவைக்கப் போனார்.
தன் தாகம் தீருவதற்காக காக்கா ஒன்று நீர் ஜாடியில் கற்களை நிறைத்துப் பின் அந்த நீர் மேலே வந்ததும் குடித்தது போல எங்கள் வீட்டு 17 மாத காக்கைக் குஞ்சு இலக்கியாவின் விளையாட்டு இது.
0 comments:
Post a Comment