இலக்கியா 🐿 மாதங்கள் 17
Edit Posted by கானா பிரபா with No commentsதனது 16 வது மாதத்தில் தான் இலக்கியா "அம்மா" என்ற வார்த்தையைப் பாவிக்கக் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன்பெல்லாம் "அம்மா சொல்லுங்கோ" என்று கேட்டால் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டே சூழலைத் திருப்பி விடுவார். தன் தாயை ஏதோ ஆத்ம நண்பரோடு பழகுவது போலத்தான் இலக்கியாவுக்கும் அவரது தாய்க்குமான பந்தம்.
"ரச தந்திரம்" படத்தில் மோகன்லால் நாயனக்காரர் ஒடுவில் உன்னிகிருஷ்ணனோடு பேசும் போது ஒரு நையாண்டிச் சிரிப்பை உதிர்ப்பார். இலக்கியாவின் அம்மாவுக்குச் சிரிப்பு மூட்டுவதற்காக இந்தச் சிரிப்பை அடிக்கடி செய்து காட்டுவேன் இலக்கியா தன் தாயின் வயிற்றில் இருந்த காலத்திலும். இப்போது எங்களோடு மட்டுமன்றி விருந்துபசாரங்களில் நண்பர்களோடு கூடும் போது மற்றவர்கள் சிரிப்பது போல இந்த மாதிரி நையாண்டிச் சிரிப்புக் காட்டுவது இலக்கியாவின் வழக்கமாகிவிட்டது அவ்வ் 😀
இலக்கியா நித்திரை கொள்ளாது அடம் பிடிக்கும் போது பக்கத்தில் படுத்திருந்து கண்ணை மூடிக் கொண்டே குறட்டை விடுவது போலப் பாவனை செய்தவாறு இலக்கியாவுக்குத் தெரியாமல் இலேசாகக் கண்ணைத் திறந்தால் பக்கத்தில் இருந்து இலக்கியா நான் செய்தது போலக் குறட்டை விட்டுக் காட்டி விட்டுச் சிரிப்பார் ஙே 🙄
இலக்கியாவின் பாட்டுக் கேட்கும் ஆர்வமும், நடன ஆர்வமும் கட்டுக்கடங்காது பெருக்கெடுத்து விட்டது. மெலடிப் பாட்டு ஏதும் போனால் பின்னால் ஒரு ஆஆஆ என்ற ஆலாபனை அந்த மெட்டுக்கு இசைவாகப் போகும். அந்த ஆலாபனையை வேறு யார் கொடுப்பார்களாம் 😀
துள்ளிசைப் பாட்டின் தாள லயத்துக்கு ஏற்ப கைகளை முறுக்கியும் சுழற்றியும் தலையை ஆட்டியும் ஆட்டம்ஸ் கொடுப்பார் இலக்கியா
இலக்கியாவுக்கு முதன் முதலாக பிஸ்கெட்டை அவர் கையில் கொடுத்தோம். தன் விளையாட்டுப் பொருளை எறிவது போல இதுக்கும் பாவனை பிடித்து எறிந்து பழகினார். பின்னர் அவரின் கையில் இருந்தே வாயில் மெல்லத் திணித்துக் காட்டினேன். இப்போது பழகி விட்டார்.
தனக்குப் பசிக்கிறது என்பதைப் பால் போத்தலைக் காட்டிக் கேட்பதன் மூலம் இலக்கியா தன் தேவையை வேண்டுகோள் விடுக்கும் முறைக்குப் போய் விட்டார்.
இப்போது நடை பயிலப் பிடிக்கும். ஆனால் இதிலும் தன்னம்பிக்கையின் சிகரமாகக் கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடப்பது. இப்போது இரண்டு கையிலும் பொருளைத் தூக்கிக் கொண்டு போகும் அளவுக்கு 😊
ஒளிச்சுப் பிடிச்சு விளையாடப் பிடிக்குமாம். என்னடா பக்கத்தில் இருந்த ஆளைக் காணோமே என்று பார்த்தால் போர்வைக்குள் இலக்கியா ஒளிச்சிருப்பாவாம் அவ்வ்
தன்னுடைய ஒரு கண்ணைத் தன் கையால் மூடியும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம் என்பது இலக்கியாவின் புதிய கண்டு பிடிப்பு 🙄
அதுக்காக FaceTime இல் லண்டனில் இருக்கும் தன் பெரியப்பாவுடன் கதைக்கும் போதும் ஒளிச்சிப் பிடிச்சு விளையாடுவது கொஞ்சம் அதிகம் தான் இலக்கியா 😀
தெரியாதவர்களைக் கண்டால் தன் தாயின்/ தந்தையின் தோளில் முகம் புதைத்துக் கொள்வாராம்.
இலக்கியாவின் அப்பா கதைப் புத்தகம் படித்தால் ஆர்வமாக அதைக் கொஞ்சூண்டு கேட்டு விட்டுப் பின் புத்தகத்தை வாங்கி அதைச் சுவைக்கப் பார்ப்பார். ம்கும்
தன் பக்கத்தில் சீப்பு இருந்தால் சீப்பால் தலையை வார முயற்சிப்பார். தலையில் இருக்கும் க்ளிப்பைக் கழற்றித் தானே செருகப் பார்ப்பார்.
விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறியது, இறங்கியது வரை எதிர்ப்படுவோருக்குப் பு
தேர்தல் கால அரசியல்வாதியாட்டாம் கையை நீட்டித் தன் கையில் தொட வைப்பதும், கையசத்து வழியனுப்பதுமாக ஒரு வழி பண்ணினார்.
விளையாட்டுப் பொருட்கள் மீதான ஆர்வம் சுத்தமாக இல்லை. வாங்கிக் கொடுத்த பழைய காலத் தொலைபேசி போன்ற விளையாட்டுச் சாமானின் கழுத்தைத் திருகி விட்டுத் தன் தொட்டிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டது சமீபத்திய பயங்கர நடவடிக்கை.
கார்ச் சாவியில் இருந்து இலக்கியாவின் விளையாட்டுப் பொருள் எல்லாம் விலை மதிக்கத்தக்கது.
எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை உன்னிப்பாகப் பார்த்து விட்டுப் பேசிப் பார்ப்பது, செய்து பார்ப்பதுமாக இலக்கியாவின் திருவிளையாடல்கள்.
தன் தாய்க்கும், தந்தைக்கும் பாசக் கணக்கில் சம பங்கு வைக்க வேண்டும் என்பது இலக்கியாவின் கொள்கை. இருவருமே தன் பக்கத்தில் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் இலக்கியாவின் அப்பா நகர்வலம்
போவதென்றால் இலக்கியாவின் கண்ணில் படாமல் தான் நகர்வாராம். ஆனால் இலக்கியா இல்லாத இடத்தில் இமைப் பொழுதும் இலக்கியா நினைப்புத் தான் அப்பாவுக்கு.
http://youtu.be/Q_DPO48tB_U
0 comments:
Post a Comment