Tuesday, February 3, 2015

இலக்கியா உண்ட முதல் சோறு

Edit Posted by with No comments


இலக்கியா பிறந்து ஒரு மாதம் நிறைந்த நாள் விஜய தசமி தினமாக அமைந்திருந்தது.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று அவருக்கு முதன்முறையாக அன்னம் ஊட்டவேண்டும் என்று நினைத்தபோது எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது, சிட்னி முருகனைக் கும்பிட்டுவிட்டு மனக் குறையோடு காரில் ஏறினேன்.

பின்னர் சிட்னியில் இருக்கும் என் நேசத்துக்குரிய ஐயரிடம் பேசிய போது "பெண் குழந்தை என்றால் ஐந்து அல்லது ஏழு மாத நிறைவில் அன்னமூட்டுவது தான் முறை" என்றார். கணக்குப் போட்டுப் பார்த்தால் பெப்ரவரி 3 ஆம் திகதி வருகின்றது.
இந்த நாள் தான் இலக்கியா பிறந்து ஐந்து மாதங்கள் நிறைவு அத்தோடு தைப்பூச நன்னாள் என்பது இரட்டிப்புச் சந்தோஷமாக இருந்தது. ஆண்டவனின் கணக்கு அது ????

இன்று இலக்கியாவின் அம்மா விடிகாலை நான்கு மணிக்கே எழுந்து வீட்டில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி, இலக்கியாவுக்கு அலங்காரம் செய்தார்.
இலக்கியாவுக்காக முதன் முதலாக வாங்கிய ஒரு சோடி வளையல்களை "அப்பா உங்கட கையால் போடுங்கோ" என்றார் இலக்கியாவின் அம்மா. மகள் கையை நீட்ட நோகாமல் காப்பைப் பூட்டினேன்.
மூவருமாக சிட்னி முருகன் கோயில் நோக்கிப் போனோம்.
காலை ஏழு மணிப் பூசையோடு பக்தர்கள் பாற்குடம் காவிப் பவனி வர உட்பிரகார வம் வந்து முடித்து வசந்த மண்டபத்தின் முன்னால் ஐயர் அமுது படைத்து, விசேட அர்ச்சனைகளைச் செய்து தீபாராதனை காட்டினார்.

"தங்க மோதிரத்தால் பொங்கலை அள்ளி அதை மசித்து ஊட்டுங்கள்" என்றார் ஐயர்.
நான் மோதிரம் என்ன கைக்கடிகாரமே கட்ட மாட்டேனே. இலக்கியாவின் அம்மா என் ஜோடி மஞ்சக் குருவி ஆச்சே ???? பொட்டுத் தங்கமும் வைக்க மாட்டார்.
ஐயர் சிரித்துக் கொண்டே தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார்.

பொங்கலை மசித்துவிட்டு மோதிரத்தால் கிள்ளி இலக்கியாவின் வாயில் வைத்தோம்.
PK படத்தின் அமீர்கான் மாதிரி ஒரு பார்த்து விட்டு "சரி உங்களை நம்பி வாயில் வைக்கிறேன்" என்று இலக்கியா சொல்லுமாற் போலப் பார்த்துக் கொண்டே நாக்கைச் சுழற்றி பொங்கல் திரளையை வாங்கிக் கொண்டார். எங்கள் அப்பா சொல்வது போல "சாத்திரப் படிக்கு" செய்ய வேண்டிய சடங்கை சிட்னி முருகன் சந்நிதியில் செய்த திருப்தியில் வீடு திரும்பி இலக்கியாவைத் தொட்டிலில் கிடத்தினோம்.
பறவை போல ஒலியெழுப்பி விட்டுச் சிரித்துக் காட்டுகிறார்.

"கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணைச் சிவ பாலன் உருவில் உன்னைக் கண்ட நாள் முதல் காதல் பெருகுதடி"

http://www.youtube.com/watch?v=iVB_QyKrXmM&sns=em

0 comments:

Post a Comment