தூளியிலே ஆட வந்த இலக்கியா
இலக்கியாவின் பிறந்த நாள் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வோடு ஒரு இசை ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்றதொரு இலட்சியம் எனக்குள் இருந்தது.
காரணம் என் சந்தோஷத்திலும், சோகத்திலும் இளையராஜாவே வழித்துணையாகவே வந்து கொண்டிருக்கிறார். ராஜாவின் பாடல்கள் இல்லாத ஒரு சூழல் எனக்கு வாய்த்திருந்தால் நான் இருந்திருப்பேனோ தெரியாது.
பிறந்த நாள் மண்டபத்துக்கு நுழையும் போதே "ஆயிரம் மலர்களே மலருங்கள்" என்று பப்பு அண்ணரின் ஒலியமைப்பின் வழியாக அட்டகாசமான ஒலித்தரத்தில் மண்டபத்தை நிறைத்த இளையராஜா பாடல்கள் ஒவ்வொன்றாக அணி செய்ய பிறந்த நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.
இலக்கியா வயதில் இருந்து என்னை வளர்த்த அண்ணன் விருந்தினரை வரவேற்றுப் பேசினார்.
நண்பர் முரளி வெங்கட்ராமன் மற்றும் அருணா பார்த்திபன் ஆகியோர் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைத் தம் அழகான குரலால் தேனிசை மழையாகச் சொரிய ஒரு மணி நேரம் கடந்து மணி மணியாகப் பாடல்கள் விருந்தினர் ஒவ்வொருவருக்கும் செவிக்கினிமை சேர்த்து மகிழ வைத்ததைக் கண்ட போது எனது மனதில் பெரும் பூரிப்பு. பாடல்கள் எல்லாமே மாசற்ற மாணிக்கங்களாக இந்த இருவரின் குரலில் வெளிப்பட்டதை இந்த நிமிடம் வரை எனக்கு வந்து சேரும் நண்பர்கள், உறவினர்களின் சிலாகிப்பால் நெகிழ்ந்து போய் இருக்கிறேன்.
"ஜனனி ஜனனி" யில் ஆரம்பித்து "தூளியிலே ஆட வந்த" எல்லாம் நிரம்பி "நான் தேடும் செவ்வந்திப்பூ" வில் நிறைந்தது.
இசைஞானி இளையராஜாவின் குழுவில் திரு நெப்பொலியன் (அருண்மொழி) உள்ளிட்ட ஓரிரு பாடகர்களை, இசைக்கலைஞர்களை அழைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தலாமோ என்று எட்டு மாதங்களுக்கு முன்பே ஒரு பேராசை துளிர் விட்டிருந்தது. ஆனால் ஏற்பாடுகளைக் கவனிக்க நேரம், காலம் பிடிக்கும் என்று முயற்சியைக் கைவிட்டேன். உள்ளூரில் சிப முன்னணி இசைக்கலஞர்களைத் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் :p
ஆபத்பாந்தவனாக வந்தார் முரளி. பேச்சுவாக்கில் இந்த முயற்சியைச் சொன்ன போது "நான் பண்ணிக் குடுக்குறேன் பிரபா" என்று அவர் சொன்னபோது அவருக்கு மூன்று மாதத்தில் ஒரு சொல்வ மகள் இருக்கிறார் என்பதை நான் மறக்கவில்லை.
தான் எடுத்துக் கொண்ட முயற்சியை வெகு சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார் முரளி அவரின் எண்ணம் போல அருணா பார்த்திபன் ஜோடி கட்டி.
"இந்த இரண்டு பேரின் குரலும் எவ்வளவு அழகானது" இது எனது மனைவியின் சிங்கள நண்பி.
"இவர்கள் சிட்னியில் தான் இருக்கிறார்களா" பிரமிப்போடு கேட்ட இங்கே பல்லாண்டு காலம் வாழ்கின்ற விருந்தினர்கள்.
இன்று காலை லண்டனில் இருக்கும் அண்ணரிடமிருந்து "எப்ப அந்தப் பாட்டு வீடியோ கிடைக்கும்" என்ற கோரிக்கை மீண்டும் கிளம்பியிருக்கிறது.
ஒலியமைப்பில் வெகு சிறப்பாகப் பங்களித்த பப்பு அண்ணருக்கு என் இதயத்தில் தனியான ஒரு இடம் இருக்கிறது. அவரின் உதவியாகப் பணியாற்றிய சகோதரிக்கும் நன்றி.
விபத்தில் சிக்கி இன்னும் முழுதாகத் தேறாத நிலையிலும் தன் குடும்ப விழாவாக ஏற்று வீடியோ படப்பிடிப்பை முழுமையாகப் பதிவு பண்ணிய அன்புத்தம்பி ஹரிஷ்,
என்னை விட மூத்தவராக இருந்தாலும் "பிரபா அண்ணா" என்று பிரியத்தோடு அழைக்கும் புகைப்படப்பிடிப்பாளர் நாதகோபால் இருவரும் இந்தப் பொன்னான நாளில் மறக்கமுடியாத பங்காளிகள்.
இலக்கியாவின் பிறந்த நாள் கேக் வெட்டும் போது குழுமியிருந்த வாண்டுகள் கை தட்டிய போது தானும் தன் பிஞ்சுக் கை தட்டிச் சிரித்து மகிழ்ந்த இலக்கியா பாடல்களுக்குத் தன் பாஷையில் அபிநயம் பிடித்து ஆடும் போது
"இந்தக் கணத்துக்காகத் தானே காத்திருந்தாய்" என்று ஆண்டவன் என் மனதில் உட்கார்ந்து கேட்பது போலிருந்தது. அழுது விடுவேனோ?
ஆண்டவனுக்கு நான் எந்த வகையில் இந்த ஏழேழு பிறவியிலும் நன்றிக்கடனைத் தீர்ப்பேன்?
தாயகத்தின் எம் தாய் தந்தையுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய இலக்கியா வாழ்வகத்தில் தாயுமானவர் இளையராஜாவின் பாடல்களோடு கொண்டாடி விட்டார்.
"தொட்டில் மேலே முத்து மாலை வண்ணப் பூவா விளையாட"
நான் தேடிக் கிட்டிய இந்த உலகம் அழகிய பாடல்களால் நிரம்பிய பந்து.
http://www.youtube.com/watch?v=RFfr-OOoPWk&sns=tw
Friday, October 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment