Tuesday, November 3, 2015

இலக்கியா நாட்குறிப்புகள் 03.11.2015

Edit Posted by with No comments

எந்த விதப் பிடிமானமும் இன்றித் தானே எழுந்து நிற்கப் பார்த்து "தொம்" என்று கீழே விழுந்து விட்டு எனக்கு வலிக்கலையே, எனக்கு வலிக்கலையே என்குமாற் போலக் குலுங்கிச் சிரித்து விட்டு மீண்டும் எழுந்து நிற்கும் பயிற்சி. இதைப் பார்க்கும் போது சலங்கை ஒலி படத்தின் கமலஹாசன் நிறை போதையில் கிணற்றுக் கட்டிலில் "தகத ததிமி தந்தானா" போடுவது போல இருக்கும்.

அப்பா வெளிக்கிட்டு நல்ல உடை உடுத்தினால் வெளியே போகப் போகிறார் என்று தானே அர்த்தம். அம்மாவின் கட்டுக்குள் இருந்து திமிறி அடித்து அவரைத் தள்ளி (ஏறக்குறையத் தள்ளி விழுத்தி) ஆர்ப்பாட்டம் செய்து தானும் வரப் போவதாக டாட்டா காட்டி சைகை செய்வார். பாவம் என்று தூக்கிக் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் தன் தாய்க்குப் பறக்கும் முத்தம் கொடுப்பாராம். அப்பாவும் நானும் வெளியே போகிறோம் என்பதற்கான சங்கேத மொழி அது.

பாட்டுக் கேட்பதென்றால் அலாதி இஷ்டம். மெல்லிய இசையோடு வரும் ( மெலடி) பாடல் என்றால் ஓஓஓ ஆஆஆ என்று ராகம் இழுப்பாராம்.
டப்பாங்குத்துப் பாட்டு என்றால் என் மகளைப் பிடிக்கவே முடியாது. இருந்த இடத்திலேயே கால்களைக் காற்றடிக்கும் பம்பு மாதிரி வளைத்து நெளித்து ஆடும் அதே நேரம் இசை நுணுக்கத்துக்கேற்ப இரண்டு கைகளும் அபிநயம் பிடிக்கும். இன்று காலை காரில் பயணிக்கும் போது ஜீன்ஸ் படத்தின் ஹைர ஹைர ஹைரோப்பா பாட்டு கனேடிய வானொலி வழியாக வந்த நேரம் சடுதியாக அந்த இசைக்குப் பறவை தன் சிறகை விரித்துக் குவிக்குமாற் போல ஆட்டம் ஆடினார் :)

அம்மா சொல்லுங்கோ என்றால் கள்ளமாகச் சிரிப்பார், அப்பா சொல்லுங்கோ என்றால் அப்ப்ப்ப்ப்பா என்று ஒரு இழுவை.

இரண்டு மாதங்களுக்குப் பொதுவில் மேலே இரண்டு பற்கள் கூட ஒரு மெல்லிய உதவியாளர், கீழே இரண்டு பற்கள் என்ற கணக்கு வைத்திருக்கிறார். பல்லுக் கொழுக்கட்டை அவித்தால் தான் பற்கள் கெதியா வளரும் என்று இலக்கியாவின் பெரியப்பாவின் வேண்டுகோளை இந்த மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.

சாய்வாக இருத்தி விட்டால் பால் புட்டியைத் தானே இரு கைகளாலும் ஏந்திக் குடிக்கப் பழகி விட்டார். பக்கத்தில் இருக்கும் அப்பாவின் மேல் தன் இரு கால்களும் மகாராணித் தோரணையில் போட்டிருப்பார்.!

மசித்த சோறு, பாஸ்டா, அவித்த காய்கறி, சீனச் சாப்பாடு எல்லாம் மென்று மெல்லப் பழகி வருகிறார்.

கேலியாகச் சிரித்துக் காட்டுவது, ஏதோ பேச எத்தனிப்பது போல தத்தக்க பித்தக்க ஒலி எழுப்புவது, கண்களைச் சிமிட்டி நளினம் காட்டுவது, நேசமாகத் தன் தலையைத் தன்னைத் தூக்கி வைத்திருக்கும் தன்னால் பிரியமானவர்கள் என்று அடையாளப்படுத்தியோருக்கு நிரூபிப்பது இதெல்லாம் சமீபத்திய புது வரவுகள்.

இலக்கியாவை அவரின் தொட்டிலில் விடுவது அவரளவில் செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதியின் நிலைக்கு ஒப்பானதாம்.

இலக்கியா தன் அப்பாவின் கண்காணிப்புடன் தான் கட்டிலில் படுப்பாராம்.
அந்த நீண்ட கட்டிலில் தன் பிள்ளையை இன்னொரு அந்தத்தில் கிடத்தி விட்டு, தூங்கும் போது அப்பாவின் கை,கால் படக்கூடாது என்று கவனமாகப் படுப்பார் இலக்கியாவின் அப்பா. 

நடுச்சாமம் தாண்டிய விடிகாலையில் புழுக்குட்டி போல உருண்டு வந்து நிமிர்ந்து படுத்திருக்கும்
தன் அப்பாவின் நெஞ்சில் தலை வைத்துக் கவிழ்ந்து படுப்பாராம் இலக்கியா. அந்த நேரம் இலக்கியாவின் அப்பாவுக்கு பூரிப்புக் கண்களில் வழியுமாம், அத்தனை ஆண்டுகள் திரட்டி வைத்திருந்த கவலை எல்லாம் கழுவித் துடைத்துக் கொண்டு.

இலக்கியாவின் அப்பா சொல்லுவார் இலக்கியாவின் அம்மாவிடம்,
"எங்களின் பிள்ளையாகப் பிறந்ததை இலக்கியா பெருமையாக நினைக்கும் அளவுக்கு நாங்கள் இவவை வளர்க்கோணும்" 

எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொன்ன இலக்கியா பிறந்து இன்றோடு பதினான்கு மாதங்கள்.

http://www.youtube.com/watch?v=SsQ74n9dc3k&sns=tw

0 comments:

Post a Comment